முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
பஞ்ச நரசிம்மர் தலங்களில் 17-இல் நரசிம்மர் ஜயந்தி
By DIN | Published On : 15th May 2019 08:52 AM | Last Updated : 15th May 2019 08:52 AM | அ+அ அ- |

சீர்காழி அருகே உள்ள பஞ்ச நரசிம்மர் தலங்களில் மே 17-இல் நரசிம்மர் ஜயந்தி விழா நடைபெறவுள்ளது.
சீர்காழி அருகே பஞ்ச நரசிம்மர் தலங்கள் ஒரே தொகுப்பாக அடுத்தடுத்த கிராமங்களில் அமைந்துள்ளன. திருவாலியில் லெட்சுமி நரசிம்மர், திருக்குறையலூர் கிராமத்தில் உக்கிர நரசிம்மர், மங்கைமடத்தில் வீர நரசிம்மர், திருநகரி கிராமத்தில் யோக நரசிம்மர் மற்றும் ஹிரண்ய நரசிம்மர் ஆகிய தலங்கள் உள்ளன.
இக்கோயில்களில் நரசிம்மர் ஜயந்தியையொட்டி, மே 17-இல் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
திருவாலி லெட்சுமி நரசிம்மர் கோயிலில் காலை 9 மணிக்கு மேல் சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை, தீபாராதனை ஆகியன நடைபெறுகின்றன. பூஜைக்கான ஏற்பாடுகளை பாலாஜிபட்டர் செய்துவருகிறார்.
இதேபோல், திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் சன்னிதியில் காலை 8 மணிக்கு மகா அபிஷேகம், கோமாதா பூஜை, சுதர்ஸன யாகம், ஏகதின லட்சார்ச்சனை, அன்னதானம் ஆகியன நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை தலைமை அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டர் செய்து வருகிறார்.
மங்கைமடம் வீரநரசிம்மர் கோயிலில் காலை சிறப்பு வழிபாடு, ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பாலாஜி பட்டாச்சாரியார் ஏற்பாடுகளை செய்துவருகிறார். திருநகரி யோக நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர் கோயில்களிலும் நரசிம்மர் ஜயந்தி சிறப்பு பூஜைகள் அன்றைய தினம் மாலை நடைபெறவுள்ளன.