இந்துக்கள் குறித்து அவதூறு கருத்து: கமல்ஹாசன் மீது சீர்காழி காவல் நிலையத்தில் புகார்
By DIN | Published On : 15th May 2019 08:57 AM | Last Updated : 15th May 2019 08:57 AM | அ+அ அ- |

இந்துக்கள் குறித்து அவதூறு கருத்து கூறியதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மீது சீர்காழி காவல் நிலையில் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
மே 19-ஆம் தேதி நடைபெற உள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையொட்டி, அரவக்குறிச்சியில் பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து' என பேசியுள்ளார்.
மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் நோக்கில் அவர் பேசியிருக்கிறார். கமல்ஹாசன் இவ்வாறு பேசுவது புதிதல்ல. ஏற்கெனவே, கடந்த 2017 நவம்பர் மாதத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் "காவி தீவிரவாதம் பரவி வருகிறது' என்று கூறியிருந்தார்.
தனது பேச்சின் மூலமாகவும், திரைப்படங்களின் மூலமாகவும் இந்துக்களை இழிவுபடுத்தும் வேலையைத் திட்டமிட்டு கமல்ஹாசன் செய்து வருகிறார். அரசியல் லாபத்துக்காக தவறான கருத்துகளைக் கூறி, சமூக நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிப்பதோடு, மதக்கலவரத்தை உருவாக்கும் வகையில் செயல்பட்டு வரும் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.