கடத்தல் முயற்சியில் உயிரிழந்த பெண் உடல் அடக்கம்
By DIN | Published On : 16th May 2019 07:23 AM | Last Updated : 16th May 2019 07:23 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கேசவன்பாளையத்தில் கடத்தல் முயற்சியில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடல் 4 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
கேசவன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் மகள்கள் கவியரசி (22), கலையரசி (20). அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகள் அனுஷ்யா (20) , மனோகரன் மகள் சரிதா (24) மற்றும் பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த அபிநயா (21) ஆகிய ஐந்து பேரும் பொள்ளாச்சியில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலை செய்து வந்தனர்.
மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஊருக்கு வந்த இவர்கள் மே 6-ஆம் தேதி இரவு பொள்ளாச்சி செல்வதற்காக கேசவன்பாளையத்திலிருந்து தரங்கம்பாடி பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த கார் கவியரசி, கலையரசி, அனுசியா, அபிநயா ஆகியோரை மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையில், பலத்த காயமடைந்த கவியரசி தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மரு த்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, மேற்குறிப்பிட்ட 5 பேரில் ஒருவரான சரிதா அளித்த புகாரின்பேரில் பொறையாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவியரசி மே 11-ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து மறுநாள் கேசவன்பாளையத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காரில் வந்தவர்கள் இளம் பெண்களை கடத்த முயன்றதால் படுகாயமடைந்த கவியரசி உயிரிழந்ததாகக் கூறி பொறையாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வருவாய் மற்றும் காவல் துறையினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், காரில் வந்த மர்ம நபர்கள் பிடித்து விசாரணை செய்யப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் முற்றுகைப் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
இருப்பினும் சம்பவம் நிகந்து 4 நாள்களை கடந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இதுகுறித்து அதிகாரிகளிடம் மீண்டும் பொதுமக்கள் பேச்சுவார்த்ததை நடத்தினர். இதில், சுமுக நிலை நிலை ஏற்பட்டதையடுத்து புதன்கிழமை கவியரசியின் சடலத்தை சொந்த ஊரில் அடக்கம் செய்தனர். போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.