செம்பனார்கோவில் அருகே மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணி: விவசாயிகள்  எதிர்ப்பு

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே விளைநிலங்களில் மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணி

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே விளைநிலங்களில் மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியுள்ளதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 
சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் விளைநிலங்களுக்கு இடையில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்குழாய் கிணற்றை அமைத்துள்ளது. இந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவை செம்பனார்கோவில் அருகே மேமாத்தூரில் உள்ள எரிவாயு கிடங்குக்கு கொண்டு சென்று சேமிக்கும் வகையில் பழையபாளையம் முதல் மேமாத்தூர் வரை சுமார் 29 கிலோ மீட்டர் தூரத்துக்கு கெயில் நிறுவனம் விளைநிலங்களிடையே ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறது. இந்த குழாய்களை நிலஉரிமையாளர்களின் ஒப்புதலின்றி பதிக்கப்படுவதாலும், இந்த குழாய் மூலம் செல்லும் எரிவாயு கசிந்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் நாங்கூர்,  வேட்டங்குடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போரட்டம் நடத்தியதால் குழாய் பதிக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. 
இதையடுத்து, காவல் துறையினரின் பாதுகாப்புடன் தற்போது மீண்டும் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. இதற்கிடையே  செவ்வாய்க்கிழமை செம்பனார்கோவில், காளகஸ்தினாநாதபுரம் பகுதியில் விளைநிலங்களுக்கு இடையே குழாய் பதிக்கும் பணி தொடங்கின. இப்பணிகளை விவசாயிகள் மற்றும் நிலநீர்ப் பாதுகாப்பு இயக்கத்தினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, உடனடியாக அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டது. இந்நிலையில், புதன்கிழமை காலை கெயில் நிறுவன ஊழியர்கள் மீண்டும் குழாய் பதிக்கும் பணிகளை தொடங்கினர். 
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியது: வருவாய் மற்றும் காவல் துறை மூலம் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறியும் மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணி தொடங்கியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். குழாய் பதிக்கும் பணி தொடர்ந்தால், பொதுமக்களை கிராமங்கள்தோறும் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com