தருமபுரம் ஞானபுரீசுவரர் கோயில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்: குருமகா சந்நிதானம் பங்கேற்பு
By DIN | Published On : 16th May 2019 07:25 AM | Last Updated : 16th May 2019 07:25 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் ஞானபுரீசுவர சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்தில் குருமகா சந்நிதானம் பங்கேற்றார்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞானாம்பிகை உடனாகிய ஞானபுரீசுவர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு பெருவிழா புதன்கிழமை தொடங்கி மே 25-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது. இந்த 11 நாள்களும் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாடும் நடைபெறுகிறது. அதன்படி, ஞானபுரீசுவரர் சுவாமி கோயில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஞானாம்பிகை சமேத ஞானபுரீசுவரர், விநாயகர், முருகன் உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.
தருமபுரம் ஆதீன 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீசண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள், இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆகியோர் ஞானபுரீசுவரர் கோயிலில் வழிபாடு நடத்தி, கொடிமரம் முன்பு வந்தனர். தொடர்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து குருமகா சந்நிதானம் முன்னிலையில், காலை 10.30 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில், சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
11 நாட்கள் நடைபெறும் பெருவிழா மற்றும் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டில் நாள்தோறும் சமயச் சொற்பொழிவு, கருத்தரங்கம், சமய பயிற்சி வகுப்பு, திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில், முக்கிய நிகழ்ச்சியாக மே 21-ஆம் தேதி திருக்கல்யாண உத்ஸவமும், மே 23-ஆம் தேதி திருத்தேரோட்டமும், மே 25-ஆம் தேதி ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை விழாவும், அன்றிரவு பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும், 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் ஞானகொலுக் காட்சியும் நடைபெறவுள்ளது.