முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு
By DIN | Published On : 18th May 2019 07:21 AM | Last Updated : 18th May 2019 07:21 AM | அ+அ அ- |

சீர்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பாடவாரியாக பணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருமுல்லைவாசலில் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்விக் கூடமாக இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருமுல்லைவாசல், கூழையார், தொடுவாய், ராதாநல்லூர், தாழந்தொண்டி, வேட்டங்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் சுமார் 1,500 பேர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பள்ளியில் மே 10-ஆம் தேதியிலிருந்து பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதில் கணினி அறிவியல், அறிவியல், உயிரியல், வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவு வாரியாக ரூ.1000 க்கும் மேல் ரூ.1500 வரை என பணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதேபோல் இப்பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கவும், ரூ.100 பெறப்படுவதாகவும், மாற்றுச் சான்றிதழை சக பள்ளி ஆசிரியர்கள் மூலம் வழங்காமல் ஆய்வக உதவியாளர், பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர் ஆகியோர் மூலம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தவிர, 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்விக்கு ரூ. 1500 வரை பணம் கேட்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபோன்ற நிதி வசூலிப்பு பள்ளி வளர்ச்சி நிதிக்கு பயன்படுத்த பெறப்படுவதாக பள்ளி தரப்பில் பெற்றோர்களிடம் கூறி வசூல் செய்கின்றனர். அரசுப் பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசே செய்து கொடுக்கிறது. அதுமட்டுமன்றி திருமுல்லைவாசல் பள்ளிக்கு சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இருந்தபோதும், அரசு விதிமுறைகளை மீறி எதற்காக மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிக்கப்படுகிறது என பெற்றோர்கள், பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கடந்த ஆண்டே இப்பள்ளியில் இதுபோன்று மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூல் செய்வதாக குற்றசாட்டு எழுந்து கல்வித் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நிகழாண்டும் உயர் அலுவலர்களின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டுவிட்டு மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கோடை விடுமுறையில் இப்பள்ளியில் சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதிமேம்பாட்டு நிதியிலிருந்து வாங்கப்பட்ட இரும்பு இருக்கைகள் பல பழைய இரும்பு கடையில் திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு வியாபாரி மூலம் விற்கப்பட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பள்ளித் தலைமையாசிரியை தமிழரசியிடம் கேட்டபோது அவர் கூறியது: பிளஸ் 2 மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்- ஆசிரியர் கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சேர்க்கை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சந்தா உள்ளிட்டவைகளுக்காக மாணவர் சேர்க்கையின்போது வசூல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதை, சேர்க்கைக்கு வந்திருந்த பெற்றோர்களிடம் கூறியிருந்தோம். பெற்றோர் ஆசிரியர் கழகம் தீர்மானத்தின்படி தற்காலிக ஆங்கிலக் கல்வி ஆசிரியர்கள் நியமனம் மற்றும் கணினிக்கு மாணவர் ஒருவருக்கு ரூ. 500 வீதம் அரசுக்குச் செலுத்த வசூல் செய்யப்படுகிறது.
வியாழக்கிழமை வரை (மே 16) கணினி அறிவியல் பாடப் பிரிவில் சேர்க்கை நடைபெறவில்லை. வணிகவியல் பிரிவில் மட்டும் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இப்பிரிவுக்கு ரூ.1,000 மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 30 பேர் சேர்ந்துள்ளனர். அனைவரும் ரூ. 1000 கொடுக்கவில்லை. ரூ.15 ஆயிரம் மட்டுமே வசூல்ஆகியுள்ளது. அவை பள்ளி வங்கிக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டுளள்ளது. நிகழாண்டு முதல் பிளஸ் 1 ஆங்கில வழிக்கல்வி சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர் ஒருவருக்கு ரூ. 500 வீதம் அரசுக்குச் செலுத்த
வேண்டும்.
தற்காலிக ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு மாத ஊதியம் வழங்க இந்த தொகை பயன்படுத்தபடுகிறது. பள்ளி இரும்பு இருக்கைகள் எதையும் விற்பனை செய்யவில்லை. அனைத்தும் பள்ளியில் உள்ளது என்றார் தமிழரசி.