முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
குறுவை நடவு வயலில் குழாய் பதிப்பு: 2-ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்
By DIN | Published On : 18th May 2019 07:19 AM | Last Updated : 18th May 2019 07:19 AM | அ+அ அ- |

செம்பனார்கோவில் அருகே குறுவை நடவு செய்த வயலில், எரிவாயு குழாய் பதிக்க பொக்லைன் இயந்திரம் கொண்டு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டாவது நாளாக விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே காலகஸ்தி நாதபுரம், முடிகண்டநல்லூர், உமையாள்புரம் ஆகிய பகுதிகளில் குறுவை சாகுபடி செய்த வயலில் முன் அனுமதியின்றி, பொக்லைன் இயந்திரம் மூலம் கெயில் நிறுவனம் எண்ணெய் எரிவாயு எடுத்துச் செல்ல குழாய் பதிக்கும் பணியை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை மேற்கொண்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து வந்த கெயில் நிறுவன ஊழியர்கள் மற்றும் மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து, தமிழ் தேசம் மக்கள் முன்னணி தலைவர் பாலன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முடிகண்டநல்லூரில் போராட்டம் நடத்தினர். இதில் நிலம்- நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து குழாய் பதிக்கும் பணி நிறுத்தப்பட்டது.