முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 18th May 2019 07:17 AM | Last Updated : 18th May 2019 07:17 AM | அ+அ அ- |

வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு, திருக்குவளை அருகேயுள்ள திருவாய்மூர் தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா மே 8-ஆம் தேதி யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி- அம்பாள் வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் வெள்ளிக்கிழமை (மே 17) நடைபெற்றது. இதில் கோயில் செயல் அலுவலர் கா.ஆறுமுகம், திருக்குவளை துணை வட்டாட்சியர் ரவிக்குமார், காவல் உதவி ஆய்வாளர் ஜி.முருகேசன், சிறப்பு தனிப் பிரிவுக் காவலர் ராஜா மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை காலை 9 மணியளவில் தொடங்கி வைத்தனர். மேளதாள முழக்கங்களுடன் புறப்பட்ட தேர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக மதியம் ஒரு மணியளவில் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையொட்டி, வீதிகளில் ஆங்காங்கே நிழற்பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி, திருக்குவளை காவல் ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் முருகப்பா, சுகுமார் உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.