முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
போலி பணி நியமன ஆணை விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் புகார்
By DIN | Published On : 18th May 2019 07:18 AM | Last Updated : 18th May 2019 07:18 AM | அ+அ அ- |

சீர்காழி அருகே உள்ள கற்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கிராம உதவியாளர் பணிக்கான போலி நியமன ஆணை அனுப்பப்பட்டது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகே உள்ள கற்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் மனைவி கயல்விழி (30). இவருக்கு கடந்த 11-ஆம் தேதி அஞ்சலில் ஒரு பணி நியமன ஆணை வந்தது. அதில், கயல்விழிக்கு கிராம உதவியாளர் பணி கிடைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நகலை எடுத்துக்கொண்டு சீர்காழி வட்டாட்சியரிடம் அவர் கேட்டபோது, அது போலி நியமன ஆணை என்பது தெரியவந்தது. இதுகுறித்து கயல்விழி அளித்த புகாரின்பேரில், கொள்ளிடம் போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.
ஆட்சியரிடம் மனு...
இதனிடையே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச் சங்கத் தலைவர் என்.பி. பாஸ்கரன், நாகை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
போலி பணி நியமன ஆணை தொடர்பாக வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தியது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிப்பதாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு, போலியான பணி நியமன ஆணையைத் தயாரித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கொள்ளிடம், சீர்காழி ஆகிய பகுதிகளில் 21 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 5 முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து விளம்பரம் வெளியாகியிருந்தது. அதன்படி, 800-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்திருந்தனர். கடந்த ஜனவரி மாதம் நேர்காணல் நடைபெற்றது. பிப்ரவரி 24-ஆம் தேதி 19 பணியிடங்களுக்கு நியமன ஆணை பிறப்பிக்கப்பட்டு, 19 பேரும் கிராம உதவியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
முன்னதாக, கிராம உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், விதிகளுக்குப் புறம்பாக பட்டதாரிகள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொள்ளிடம் ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் ஜானகி ராஜதுரை புகார் அளித்திருந்தார். இந்நிலையில், பெண் ஒருவருக்கு போலி பணி நியமன ஆணை அனுப்பப்பட்டிருப்பது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.