பேருந்து மோதி மாடு பலி: கிராம மக்கள் போராட்டம்
By DIN | Published On : 18th May 2019 07:16 AM | Last Updated : 18th May 2019 07:16 AM | அ+அ அ- |

நாகை அருகே தனியார் பேருந்து மோதியதில் மாடு ஒன்று பலியானது. 2 மாடுகள் காயமடைந்தன. இதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சிக்குள்பட்ட பரவை அருகே மாடுகள் சில சாலையைக் கடக்க முற்பட்டுள்ளன. அப்போது, நாகையிலிருந்து வேதாரண்யம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று அந்த மாடுகள் மீது மோதியது. இச்சம்பவத்தில் ஓர் எருமை மாடு அவ்விடத்திலேயே பலியானது. 2 மாடுகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
போராட்டம்...
இதைத் தொடர்ந்து, கிராம மக்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்கள் அந்தப் பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகை- வேளாங்கண்ணி கிழக்குக் கடற்கரை சாலையில் போக்குவரத்து தடைபட்டது.
தகவலறிந்த வேளாங்கண்ணி போலீஸார், அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.