விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பு: போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலம்-நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கைது
By DIN | Published On : 19th May 2019 09:00 AM | Last Updated : 19th May 2019 09:00 AM | அ+அ அ- |

செம்பனார்கோவில் அருகே கெயில் நிறுவனம் சார்பில் விளைநிலங்களின் வழியே குழாய் பதிக்கும் பணி சனிக்கிழமை 3-ஆவது நாளாக தொடர்ந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலம்- நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம், மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கி.மீ. தூரத்துக்கு கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு எடுத்துச் செல்லும் வகையில் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இப்பணிகள், செம்பனார்கோவில் அருகே உள்ள மேமாத்தூர், காளகஸ்திநாதபுரம், முடிகண்டநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் குறுவை சாகுபடி மற்றும் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்கள் வழியாக கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வருகின்றன. இதற்கு, அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளிடம் அனுமதி பெறாமலேயே விளை நிலங்களில் குழாய் பதிக்கப்படுவதாகவும், இப்பணியை நிறுத்த வலியுறுத்தியும் நிலம்- நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் தலைமையில் அப்பகுதி விவசாயிகள் 3-ஆவது நாளாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையறிந்த, செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார், இரணியனை கைது செய்தனர். மேலும், விவசாயிகள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையில், குழாய் பதிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதற்கு, பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தலைவர்கள் கண்டனம்
காவிரி டெல்டா பகுதிகளில் கெயில் நிறுவனம் சார்பில் விவசாய நிலங்களில் குழாய் பதிக்கப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வைகோ: நாகப்பட்டினம் மாவட்டம் - சீர்காழி அருகில் உள்ள பழையபாளையத்தில் விளைநிலங்களில் எரிவாயு எடுப்பதற்கான ஆழ்குழாய் கிணறுகளை இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் அமைத்துள்ளது.
இங்கு எடுக்கப்படும் எரிவாயு, செம்பனார்கோவில் அருகே மேமாத்தூரில் உள்ள கிடங்குக்குக் கொண்டுசென்று சேமிக்கப்படுகிறது. இதற்காக பழையபாளையம் முதல் மேமாத்தூர் வரை சுமார் 29 கி.மீ. தூரத்துக்கு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
ஊர் மக்கள் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழக அரசு அதிகாரிகள் கவலையின்றி அலட்சியப்போக்குடன் செயல்படுவதால், கெயில் நிறுவனம் தமது விருப்பம் போல விளைநிலங்களைச் சீரழிக்கும் பணியைச் செய்து வருகிறது.
விவசாய நிலங்களை பாழ்படுத்தும் முயற்சியில் கெயில் நிறுவனம் இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
ராமதாஸ்: மாதானம் முதல் மேமாத்தூர் வரை கெயில் எண்ணெய்க் குழாய்ப் பாதை அமைப்பதால் அப்பாதை நெடுகிலும் உள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்கள் பாதிக்கப்படும். இதனால் பல்லாயிரம் விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழப்பர்.
எனவே, உடனடியாக இத்திட்டத்தை கைவிட மத்திய அரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
தினகரன்: சீர்காழியை அடுத்த மாதானம் முதல் செம்பனார்கோவில் அருகிலுள்ள பகுதிகள் வரை விளை நிலங்களில் எரிவாயு குழாய்களைப் பதிக்க வேண்டுமென கெயில் நிறுவனம் பிடிவாதமாக உள்ளது. ஆனால், அதற்கு அந்தப் பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையும் மீறி, எரிவாயு குழாய்களைப் பதிப்பதற்கான பணிகளை அரசின் துணையோடு கெயில் மேற்கொண்டு வருவதால் பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அந்தப் பணியை மத்திய-மாநில ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.