வாகன ஓட்டிகளின் வேகத்தால் பொதுமக்கள் அச்சம்
By DIN | Published On : 20th May 2019 09:50 AM | Last Updated : 20th May 2019 09:50 AM | அ+அ அ- |

திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதால் அப்பகுதியில் நடமாடும் பொதுமக்களிடையே விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
கோடை வெயிலுடன் கத்திரி வெயில் வீசிவருவதால் காற்றின் ஈரப்பதம் முழுவதும் உறிஞ்சப்பட்டு அனல் காற்றாக வீசி வருவதால் முற்பகல் 11 முதல் மாலை 3 மணி வரை பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளி வரவே அச்சப்படுகின்றனர். இதனால், இப்பகுதியில் உள்ள சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் பல்வேறு பணிக்கு செல்வோர் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட , விரைவு பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால், திடீரென சாலையை கடக்க முற்படுவோர் சிறு அளவிலான விபத்துக்களில் சிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பலர் அதிவேகத்தில் வாகனத்தை இயங்கி செல்கின்றனர். இதனால், சாலையை கடக்க முயல்வோர் விபத்தில் சிக்கி விடுவோமா எனும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே, போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபடும் காவல் துறையினர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.