நிலக்கடலை விவசாயிகள் பொருளீட்டுக் கடன் பெற அழைப்பு
By DIN | Published On : 23rd May 2019 06:21 AM | Last Updated : 23rd May 2019 06:21 AM | அ+அ அ- |

வேதாரண்யம் பகுதியில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் நிலக்கடலையை இருப்பு வைத்து பொருளீட்டுக் கடன் பெறலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் விற்பனைக் குழு இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, விற்பனைக் குழு செயலாளர் (பொறுப்பு) வித்யா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு (அரிசிக் கிடங்கு) பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், விவசாயிகள் தங்களிடமுள்ள நிலக்கடலையை இருப்பு வைத்து 5 சதவீத வட்டியில் பொருளீட்டுக் கடன் பெற்றுக்கொள்ளலாம்.
சிறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சமும், பெரு விவசாயிகள், வியாபாரிகளுக்கு ரூ.2 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்பட்டும். விவசாயிகள் தங்களிடம் உள்ள நிலக்கடலையை இருப்பு வைத்துக்கொள்ளவும், அதன்பேரில் பொருளீட்டுக் கடன் பெற்றும் பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.