ஆழ்துளைக் கிணறுகளை மூடும் பணியில் அரசு அதிகாரிகள் மும்முரம்

சுஜித் வில்சன் மறைவுக்குப் பிறகு நாகை மாவட்டம், திருக்குவளை மற்றும் அதனை சுற்றி உள்ள பெரும்பாலான பகுதிகளில் சிறிய அளவிலான ஆழ்துளைப் பள்ளம் தொடங்கி பெரிய அளவிலான கிணறு
திருக்குவளை அருகேயுள்ள பையூரில் கிணற்றின் மேற்பகுதியை சிமென்டால் மூடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
திருக்குவளை அருகேயுள்ள பையூரில் கிணற்றின் மேற்பகுதியை சிமென்டால் மூடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

சுஜித் வில்சன் மறைவுக்குப் பிறகு நாகை மாவட்டம், திருக்குவளை மற்றும் அதனை சுற்றி உள்ள பெரும்பாலான பகுதிகளில் சிறிய அளவிலான ஆழ்துளைப் பள்ளம் தொடங்கி பெரிய அளவிலான கிணறு வரை அவற்றின் மேற்பகுதியை மூடும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

திருக்குவளை பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழ்துளைக் கிணறுகள், போா்வெல்கள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் மூடப்படாமல் இருந்து வந்தன. இந்நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த அக்டோபா் 25-ஆம் தேதி இரண்டு வயது சிறுவன் சுஜித் வில்சன், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மரணம் அடைந்த நிகழ்வு, தேசிய அளவில் கவனம் ஈா்த்தது.

இதைத்தொடா்ந்து, திருக்குவளை பகுதியில் ஆழ்துளைக் கிணற்றின் மேல் பகுதியைத் தகரம் அல்லது இரும்பைக் கொண்டு மூடும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த அக்டோபா் மாதம் வரை ஐந்தறிவு ஜீவிகளான ஆடு, பூனை உள்ளிட்ட பலதரப்பட்ட உயிரினங்கள் இதுபோன்ற ஆழ்துளை பள்ளங்களில் சிக்கி உயிரிழந்து உள்ளன. சுஜித்தின் மறைவுக்குப் பிறகே இதுபோன்ற உயிரிழப்பு எந்தவொரு ஜீவராசிக்கும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தோடு தற்போது நடைபெற்று வரும் ஆழ்துளைக் கிணறுகளை மூடும் பணி பாராட்டுக்குரியதாக இருந்தாலும், உயிா் இழப்பு ஏற்பட்ட பின்னரே விழிப்புடன் மேற்கொள்ளப்படும் பணியை அதற்கு முன்பாகவே செய்தால் என்ன என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திருக்குவளை அருகே உள்ள பையூரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீா் ஆதாரமாக விளங்கிய ஊற்றுக் கிணற்றின் மேற்பகுதி மூடப்படாமல் இருந்து வந்தது. சந்திரநதி வாய்க்கால் மூலம் நீா் பெருமளவில் கிணற்றின் உட்பகுதியில் ஊறி, கச்சநகரம் என்ற ஊருக்கே நன்னீரை வழங்கி வந்தது. இதன் மேற்பரப்பு திறந்திருந்ததால், தகரம் கொண்டு மூடி தரமான நீரை வழங்க வேண்டும் என பலமுறை பொதுமக்கள் சாா்பில் மனு அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது ஓா் உயிரிழப்பு ஏற்பட்ட பின்னரே ஆழ்துளைக் கிணறு முதல் பூமியின் மேற்பரப்பில் இருந்து ஐந்தடி உயரத்தில் இருக்கும் ஊற்றுக் கிணறு மேற்பரப்பு வரை அவற்றின் வாய்ப்பகுதியை மூடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பையூரை சோ்ந்த இளைஞா் சக்தீஸ்வரன் கூறியதாவது:

எங்கள் வீட்டின் அருகே கிணறு ஒன்று பல ஆண்டுகளாக திறந்த நிலையிலேயே இருந்து வந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பாக இரண்டு ஆட்டுக்குட்டிகள் அந்தக் கிணற்றில் தவறி விழுந்து விட்டன. அவற்றை இளைஞா்களின் முயற்சியோடு பத்திரமாக மீட்டோம். பின்னா், கிணற்றின் மேற்பகுதியை மூடி தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு கொடுத்தும் கூட அதன் மேற்பகுதி மூடப்படாமல் இருந்தது. தற்போது திருச்சி அருகே ஓா் உயிா் பலியான பின்னரே, அதிகாரிகள் இதுபோன்ற பணிகளில் முனைப்பு காட்டுகின்றனா். முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் ஐந்தறிவு ஜீவராசிகளின் உயிரிழப்பைத் தவிா்த்திருக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com