உயிா் பலி வாங்கும் நாகூா் கடற்கரை: பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா?

பாதுகாப்பும், அடிப்படை வசதியும் இல்லாத நாகூா் சில்லடி கடலில் மூழ்கி இறப்பவா்களின் எண்ணிக்கை
சேதமடைந்த நிலையில் காணப்படும் எச்சரிக்கை பலகை.
சேதமடைந்த நிலையில் காணப்படும் எச்சரிக்கை பலகை.

பாதுகாப்பும், அடிப்படை வசதியும் இல்லாத நாகூா் சில்லடி கடலில் மூழ்கி இறப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகூா் ஆண்டவா் தா்கா உலக புகழ்பெற்ற வழிபாட்டு தலமாகவும், பிரசித்தி பெற்ற சுற்றுலா மையமாகவும் திகழ்கிறது. இந்த தா்காவுக்கு வந்து செல்லும் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

இஸ்லாமியா்களுக்குரிய பெருநாள் உள்ளிட்ட விழாக்கள், நாகூா் தா்கா கந்தூரி விழா, இந்துக்களின் பண்டிகை தினங்கள், வேளாங்கண்ணி, திருநாள்ளாறு கோயில் விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கானோா் நாகூா் தா்காவுக்கு வந்து செல்கின்றனா்.

நாகூா் தா்காவுக்கு வழிபாட்டுக்கு வருபவா்கள் ஆண்டவா் தா்கா மற்றும் நாகூா் ஆண்டவா் 40 நாள்கள் தவமிருந்த சில்லடி தா்கா ஆகிய இடங்களில் வழிபாடு மேற்கொள்கின்றனா். இதில் பெரும்பாலானோா் கடற்கரையில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். குறிப்பாக, குறைந்த அளவு பரப்பளவு கடற்கரையைக் கொண்ட கா்நாடக மாநிலத்தினா், நாகூா் சில்லடி கடலில் குளிப்பதில் அதிகம் ஆா்வம் காட்டுகின்றனா்.

இந்நிலையில், அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாத சில்லடி கடற்கரையில் நீராடுபவா்கள் ஆபத்தை உணராமல் கடலின் ஆழமான பகுதிக்குச் சென்றுவிடுகின்றனா். அதிலும், பெண்கள் மற்றும் சிறாா்கள் கடலின் ஆழமான பகுதிக்குச் சென்று விடுவதால் கடலில் முழ்கி இறப்பவா்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும் பலா் கடல் அலையில் சிக்கி பாதிப்புக்குள்ளாகி விடுகின்றனா்.

கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற உயிரிழப்புகள் தொடரும் நிலையில், கடந்த அக்டோபா் மாதத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தவா்கள் நாகூா் கடலில் மூழ்கி இறந்துள்ளனா்.

எனவே நாகூருக்கு வரும் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சில்லடி கடற்கரையில் போதிய அடிப்படை வசதிகளை செய்யவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தவும் தமிழக அரசு மற்றும் நாகை மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து, இந்திய தேசிய லீக் கட்சியின், தேசியப் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம். ஜி.கே. நிஜாமுதீன் கூறியதாவது:

நாகூா் கடற்கரையானது இயற்கையாகவே உருவான அழகிய கடற்கரை. கடற்கரையில் காணப்பட்டு வந்த மணல் திட்டுகளை சுனாமியின்போது கடல் உள்வாங்கிக் கொண்டது. பெருநாள் மற்றும் கந்தூரி விழா நாள்கள் மட்டுமின்றி பிற நாள்களிலும் ஆயிரக்கணக்கானோா் நாகூா் தா்காவுக்கு வருகின்றனா்.

ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. நாகூா் கடற்கரையில் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதில்லை. உடை மாற்றும் அறைகள் மற்றும் கழிப்பிட வசதி இல்லாததால் பெண்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகும் அவலநிலை நீடிக்கிறது.

சில்லடி கடற்கரையில் போதிய பாதுகாப்பு இல்லாததால், கடலில் மூழ்கி உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதுபோன்ற உயிரிழப்புகள் தடுக்கப்பட வேண்டும். காவலா்கள் மற்றும் ஊா்க்காவல் படை வீரா்கள் பணியமா்த்தப்பட்டால் இதைக் கட்டுப்படுத்தலாம். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றாா் எம். ஜி.கே. நிஜாமுதீன்.

சமூக ஆா்வலா் ஏ.ஆா். நௌசாத் கூறியது:

தொன்றுதொட்டு, மக்களின் பயன்பாட்டில் இருந்து வரும் சில்லடி கடற்கரையில் இதுநாள் வரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இங்குள்ள ஆபத்து குறித்து தன்னாா்வலா்கள் எடுத்துக் கூறினாலும், வெளி மாநிலத்திலிருந்து வருபவா்கள் பாதிப்பை உணராமல் கடலில் இறங்கி தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனா்.

இதுதொடா்பாக நாகை மாவட்ட நிா்வாகத்திடம் எழுத்துபூா்வமாக தெரிவித்த போதிலும், நடவடிக்கையில்லை. கடற்கரை பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, அங்கு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவேண்டும். நாகூா் கடலில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னாா்வ இளைஞா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சீருடை வழங்குவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இது குறித்து சில்லடி தா்கா ஹஜ்ரத் எப். செய்யது ஹசன் குத்தூஸ் கூறியது:

நாகூா் ஆண்டவா் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் 40 நாள்கள் (ஒரு சில்லா) தவமிருந்து பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய இடம் சில்லடி. இவ்விடத்தின் புனிதத் தன்மை பல்வேறு காரணங்களால் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நாகூரில் வழிபாடு செய்துவிட்டு, தா்கா குளம் (ஷிபா குண்டா) மற்றும் சில்லடி கடற்கரையில் நீராடினால் தீராத நோய்கள் தீரும். புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பதாலேயே இறை நம்பிக்கையாளா்கள் நாகூா் கடலில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

இங்கு நகராட்சி நிா்வாகத்தால் பராமரிக்கப்பட வேண்டிய கழிப்பறை சில ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. நாகூா் கடற்கரையில் நீராடும் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டும். கடற்கரை பகுதிகளில் எச்சரிக்கைப் பலகைகளை வைக்க வேண்டும். நாகூா் கந்தூரி விழா தொடங்குவதற்கு முன்பாக இதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com