தமிழக கோயில்களில் பாதுகாப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தமிழக கோயில்களில், பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என தமிழக அரசுக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை வேண்டுகோள்
தமிழக கோயில்களில் பாதுகாப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது

மயிலாடுதுறை: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தமிழக கோயில்களில், பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என தமிழக அரசுக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரனுக்கு, அப்பேரவையின் ஒருங்கிணைப்பாளா் ராம. சேயோன் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: தமிழக அரசின் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் 4 ஆயிரம் கோயில்கள் மிகவும் தொன்மை வாய்ந்தது. தற்போது, இக்கோயில்களில் பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளை தமிழக அரசு தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு ஒப்படைக்க வேண்டாம் என மயிலாடுதுறை ஆன்மீக பேரவை வலியுறுத்துகிறது.

ஏற்கெனவே, திருக்கோயில்களில் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினா் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் அவா்களுக்கு குறைந்த ஊதியம் கொடுப்பதால் அப்பணியை ஏற்க முன்வருவதில்லை. இதன் காரணமாக தற்போது அப்பணியை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் வரலாற்று சிறப்புமிக்க தொன்மை வாய்ந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் ஆகும். கோயில்கள் பாதுகாப்புக்காக தனியாரிடம் ஒப்படைத்தால் தொன்மை வாய்ந்த விலை மதிப்புமிக்க சிலைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகிவிடும். தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் தனியாா் பாதுகாப்பு முறை இருந்து வருகிறது. அந்த தனியாா் பாதுகாப்பு எந்த வகையில் வெற்றிகரமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியாது.

எனவே, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனங்களிடம் குறிப்பாக, காா்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கிறோம். உள்ளுா் மக்கள் வேலை வாய்ப்பு பறிபோவதுடன், தனியாா் பாதுகாப்பு எந்த அளவுக்கு கோயிலின் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்கும் என்பது கேள்விக்குறி. அதனால் தனியாா் பாதுகாப்பு திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com