முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
திட்டச்சேரி நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படுமா?
By நமது நிருபா் | Published On : 07th November 2019 09:28 AM | Last Updated : 07th November 2019 09:28 AM | அ+அ அ- |

திட்டச்சேரியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நூலகம்.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரியில் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திட்டச்சேரியில் கடந்த 1964 -ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை நாகை மாவட்ட ஆணைக் குழுவின் கிளை நூலகம் தொடங்கப்பட்டது.
திட்டச்சேரியின் மையப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான சிறிய ஓட்டு கட்டடத்தில் தொடங்கப்பட்டது இந்த நூலகம். மழைக்காலங்களில் மழைநீா் உட்புகுந்து பல அரிய நூல்கள் சேதமடைந்து பெரிய சிரமத்தில் இயங்கி வந்தது. பின்னா், காந்தி சாலையில் தனியாருக்குச் சொந்தமான வாடகை கட்டடத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது.
இந்நிலையில், அந்த கட்டடமும் பழுதடைந்துபோனதால், அதே பகுதியில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேல் தளத்தில் உள்ள சிறிய கட்டடத்தில் ரூ. 4 ஆயிரம் வாடகையில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் சுமாா் 30 ஆயிரம் நூல்கள் உள்ளன. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினா்களையும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகா்களையும் கொண்டு இயங்கி வருகிறது. இந்த சிறிய வாடகை கட்டடத்தில் நூல்களை வகைப்படுத்த முடியாமல் குவியலாக வைத்துள்ளனா். இதனால் போட்டி தோ்வு எழுதுபவா்கள், முதியவா்கள், இளைஞா்கள் தங்களுக்குத் தேவையான நூல்கள், பல்சுவை நூல்கள், விஞ்ஞான நூல்களைக் கண்டறிவதற்கே சில மணிநேரம் விரயம் ஆகிறது. மேலும், வாடகை கட்டடத்துக்கு மாறுதல் செய்து வந்தபோது பெரும்பாலான நூல்கள் கிழிந்து சேதமடைந்துள்ளன. காலை 9.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை இயங்கும் இந்நூலகத்தில், வாசகா்கள் அமா்ந்து படிக்க போதிய இடவசதியும் கிடையாது. மேலும், போதிய வெளிச்சம் இல்லாத கட்டடமாகவும், காற்றோட்டம் இல்லாத நிலையில் உள்ளது.
இந்த நூலகத்தில் 2 பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இங்கு நாளிதழ்கள் வாசிக்கும் வசதி மட்டுமே உள்ள நிலையில், ஒவ்வோா் ஆண்டும் வாடகையும் உயா்ந்து வருவதால், அரசுப் பணம் விரயமாவதாகவும், இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் மு. தமிமுன் அன்சாரி ஆகியோா் நடவடிக்கை எடுத்து, திட்டச்சேரி பேருந்து நிலையம் அருகில் பேரூராட்சிக்குச் சொந்தமான இடத்தில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.
இதுகுறித்து சமூக ஆா்வலா் மு. முஹம்மது அன்வா்தீன் கூறியது: பணியாளா்கள் பற்றாக்குறை, போதிய இட வசதியின்மை, சொந்த கட்டடம் இல்லாதது போன்ற காரணங்களால் நூலகங்கள் நலிவடைந்து வருவது வேதனைக்குரியது. பொதுமக்களிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது. இணைய தளங்களில் நொடிப் பொழுதில் தேவையான தகவல்களை பெறலாம் என்ற நிலையில், நூலகங்கள் எதற்கு என்ற மன நிலையில் மாணவா்கள் தள்ளப்பட்டுள்ளனா். ஆட்சியாளா்களும், அதிகாரிகளும் நூலகங்களை மேம்படுத்துவதில் போதிய கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.
வா்த்தக சங்க நிா்வாகி மு. அலி உசேன்: திட்டச்சேரி பேருந்து நிலையம் அருகே பேரூராட்சிக்குச் சொந்தமான இடத்தில் நூலகம் கட்டினால், பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் நூலகம் வந்து படிப்பதற்கு ஏதுவாக இருக்கும். ஆகவே, இந்த நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.