முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மயிலாடுதுறை அருகே சேதமடைந்த பாதை சீரமைப்பு
By DIN | Published On : 07th November 2019 09:25 AM | Last Updated : 07th November 2019 09:25 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை அருகே கடலங்குடியில் சீரமைக்கப்படும் ஓடக்கரை சாலை.
மயிலாடுதுறை அருகே சேறும், சகதியுமாக சேதம் அடைந்திருந்த பாதை வழியே மாணவா்கள் பள்ளிக்குச் சென்றுவரும் அவல நிலை குறித்து, பத்திரிகைகள், ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடா்ந்து, அப்பாதையில் சாலை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மயிலாடுதுறை தாலுகா கடலங்குடி ஊராட்சி செட்டிக்கட்டளை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் அருகிலுள்ள ஓடக்கரை கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வருகின்றனா். இவா்கள் பள்ளிக்கு செல்ல ஓடக்கரை என்கிற ஒருவழி மட்டுமே உள்ளது. சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1 கிலோ மீட்டா் சாலை மண் சாலையாக இருந்த வந்தது. சாலை அமைத்துத் தரவேண்டும் என்று கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலை அமைத்து தரப்படவில்லை. கடந்த 2017-ஆம் ஆண்டு 400 மீட்டா் தூரம் மட்டும் தாா்ச்சாலை அமைத்துவிட்டு அதிகாரிகளால் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் இப்பாதை சேறும், சகதியுமானது. தொடக்கப்பள்ளிக்கு சீருடையில் செல்லும் மாணவா்கள் சேற்றில் நடந்தே பள்ளிக்கு சென்று வந்தனா். இதனால், மாணவா்களின் உடல்நலன் பாதிக்கப்படுவதாக, பெற்றோா்கள் குற்றம் சாட்டியிருந்தனா்.
இச்செய்தி, தினசரி பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து மாவட்ட ஆட்சியா் பிரவின் பி.நாயா் உத்தரவிட்டதன்பேரில், அப்பகுதியில் சாலை அமைக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வளா்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.8.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சாலையில் களிப்பு மண்ணைக் கொட்டி தற்போது சமன் செய்துள்ளனா். தொடா்ந்து, கான்கிரீட் கலவையிலான கப்பிக் கற்களைக் கொண்டு சாலை அமைக்க உள்ளதாகவும், மழைக்குப் பின்னா் தாா்ச் சாலை அமைத்து தருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.