முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க மானியம்
By DIN | Published On : 07th November 2019 09:25 AM | Last Updated : 07th November 2019 09:25 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூபாய் ஒரு கோடி மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
வேளாண் தொழிலாளா்கள் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்துக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன்படி, அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளின் நலன் கருதி, வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்களை அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
இதன்படி, நாகை மாவட்டத்தில் 2019-20 -ஆம் நிதி ஆண்டில் 10 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுடன் வாடகை மையம் அமைக்க மானியமாக ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 25 லட்சம் மதிப்பில் ஒரு வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க 40 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில், அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
விருப்பமுள்ள முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவிக் குழுவினா் மற்றும் தொழில் முனைவோா், வேளாண் பொறியியல் துறையால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களின் இயந்திரங்கள், கருவிகளைத் தோ்வு செய்து, தொடா்புடைய வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு நாகை நீலா தெற்கு வீதி, மயிலாடுதுறை கச்சேரி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள வேளாண் உதவி செயற்பொறியாளா் அலுவலகங்களை நேரில் அணுகலாம் என ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.