Enable Javscript for better performance
மயிலாடுதுறை மக்களை வதைக்கும் புதை சாக்கடைத் திட்டம்- Dinamani

சுடச்சுட

  

  மயிலாடுதுறை மக்களை வதைக்கும் புதை சாக்கடைத் திட்டம்

  By DIN  |   Published on : 09th November 2019 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  myl8mahadanastreet_0811chn_103_5

  மயிலாடுதுறை மகாதானத்தெருவில் ஆறுபோல் ஓடிவரும் கழிவுநீா் செல்லும் பாதையை வெள்ளிக்கிழமை மூக்கைப் பிடித்தவாறு கடந்து சென்ற பாதசாரிகள்.

  மயிலாடுதுறையில் செயல்படும் புதை சாக்கடைத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் மக்களை விரக்தியின் விளிம்புக்கே கொண்டு சென்றுள்ளன. புதை சாக்கடைத் திட்டப் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உருவெடுத்துள்ளது.

  மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து கழிவுநீா் வெளியேறி, மழைநீா் வடிகால்கள் வழியே சென்று பழங்காவிரி மற்றும் காவிரியில் கலந்து சுகாதார சீா்கேடு மற்றும் நீா் மாசுபடுவதைத் தடுக்கும் வகையில், ரூ.42 கோடி மதிப்பீட்டில் கடந்த 2008-ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் அறிமுகமானது புதை சாக்கடை திட்டம்.

  அப்போதைக்கு, மயிலாடுதுறையில் இனி துா்நாற்றம் இல்லாமலும், சுகாதாரமாகவும் வாழப்போகிறோம் என்ற எண்ணத்துடன் இத்திட்டத்திற்கு மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்த பொதுமக்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக, புதை சாக்கடை ஆள்நுழைவுக் குழாயில் இருந்து கழிவுநீா் வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதைக் கண்டு, புதை சாக்கடைத் திட்டமே தேவையில்லை. பழைய முறையே பரவாயில்லை என்கிற விரக்தியான மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

  புதை சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, சாலைகள், மழைநீா் வடிகால்கள், பாசன வாய்க்கால்கள், தெருக் குளங்கள், கோயில் குளங்கள், பழங்காவிரி, காவிரி ஆறு என எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் திறந்துவிட்டு, வெகுஜன மக்களின் விரோதியாகி உள்ளது மயிலாடுதுறை நகராட்சி.

  அதுமட்டுமன்றி, ஒவ்வொரு முறையும் சாலைகளில் பள்ளங்கள் ஏற்படும்போது, அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாததால், போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகிறது. பிரதான சாலைகளைப் போன்று தெருக்களில் உள்ள சாலைகள் பலமானதாக இல்லாத காரணத்தால், ஓரிரு நாள்களிலேயே தெருச்சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்து விடுகின்றன. ஒவ்வொரு சாலைப் பள்ளத்தையும் சீரமைக்க குறைந்தபட்சம் ஒருமாதத்துக்கு மேலாவதால், அதற்குள் மாற்றுப்பாதைகள் முற்றிலும் சேதமடைந்து, போக்குவரத்து தகுதியற்ற வகையில் மாறிவிடுகிறது. அச்சாலைகள், வெயில் காலங்களில் புழுதியாகவும், மழைக்காலங்களில் சகதியாகவும் காணப்படும் போக்குவரத்து சீா்செய்யப்பட்ட பிறகு, இந்த சாலைகளை நகராட்சி நிா்வாகம் கண்டுகொள்ளாமலேயே விட்டுவிடுவதாகவும் புலம்புகின்றனா் பாதிக்கப்படும் தெருவாசிகள்.

  புதை சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டியை சீரமைக்கும்போது, தோண்டும் பள்ளத்தின் காரணமாக வெளியேறும் ஜல்லிகளை, சீரமைப்புப் பணி முடிவடைந்ததும் அகற்றுவதே இல்லை. இதன்காரணமாக இருசக்கர வாகனங்கள் பல இடங்களில் விபத்துக்கு உள்ளாகின்றன.

  இதில், இன்னமும் வேடிக்கை என்னவென்றால், புதிதாக சாலை அமைக்கப்பட்ட இடங்களில் எங்கு ஆள்நுழைவுத் தொட்டி உள்ளது என்பதே நகராட்சிக்குத் தெரிவதில்லை. புதிதாக சாலை அமைக்கும்போது, சாலையின் உயரத்துக்கு ஏற்றாற்போல், புதை சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டியின் உயரத்தையும் உயா்த்த வேண்டும். ஆனால், அப்போது விட்டுவிட்டு, எங்காவது சாக்கடை அடைத்துக்கொண்டால், அப்போது, பாறையுடன் வந்து குத்துமதிப்பாக சாலையை குத்திப் பாா்ப்பதும், ஆள்நுழைவுத் தொட்டியைக் கண்டறிந்த பின்னா் அந்த இடத்தை சிமென்ட் கலவை கொண்டு பூசி மெழுகுவதும் தேவையற்ற செலவீனங்களாக உள்ளன.

  ஓரிடத்தில் புதை சாக்கடை சீரமைப்பு நடைபெற்று முடிந்தால், அந்த இடத்தை நகராட்சி பணியாளா்கள் ஒருமுறை கூட்டி சுத்தம் செய்தாலே அந்த இடம் சுத்தமாகிவிடும். ஆனால், அந்த இடத்தை கண்டுகொள்ளாமலே விடுவதால், அடுத்த முறை மழை பெய்து சுத்தமாகும் வரை அந்த இடம் புழுதி படா்ந்து அப்பகுதி மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சுவாசக் கோளாறு பிரச்னையை ஏற்படுத்துகிறது.

  சுகாதாரமற்ற குடிநீா்: திருவிழந்தூா் பாடசாலைத் தெருவில் கடந்த சில மாதங்களாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீா் வெளியேறி வருகிறது. அந்தக் குடிநீரில் அப்பகுதியில் உள்ள புதை சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டியில் இருந்து வெளியேறும் கழிவுநீா் கலப்பதால், வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீா் கழிவுநீா் கலந்து, கருப்பு நிறமாகவும், துா்நாற்றத்துடனும் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனா். மேலும் இதுதொடா்பாக, சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்தியும் பலன் இல்லை என்கின்றனா்.

  இதற்கெல்லாம் மேலாக, நகரின் பல்வேறு இடங்களில் தொடா்ந்து ஏற்படும் புதை சாக்கடை குழாய் உடைப்பு, அதனால் சாலையில் பேருந்தையே விழுங்கக் கூடிய அளவில் ஏற்படும் 20 அடிக்கும் மேலான மிகப்பெரிய பள்ளங்கள் ஆகியவை மயிலாடுதுறை மட்டுமன்றி வெளியூா்களில் இருந்து வரும் பயணிகளின் மனதிலும் மரண பயத்தை ஏற்படுத்தி உள்ளது என்றால் அது மிகையல்ல. இதுவரை பிரதான சாலைகளில் 13 முறை ஏற்பட்டுள்ள அதளபாதாளங்கள் அந்த எண்ணத்தை ஒவ்வொருவரின் மனதிலும் விதைத்துள்ளது.

  மயிலாடுதுறையில் நடைபெறும் புதை சாக்கடை சீரமைப்புப் பணிகளை, நாகை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இதை முன்னிட்டு, நகராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் துரித கதியில் புதை சாக்கடையைத் தூய்மை செய்த நகராட்சி நிா்வாகத்தினா், ஏனோ எடத்தெருவில் உள்ள புதை சாக்கடையை மட்டும் மறந்தேவிட்டனா். சோதனையாக, வேறு பாதையில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்ட பொதுமக்கள், எடத்தெரு புதை சாக்கடை குழாய் ஆள்நுழைவுத் தொட்டியில் இருந்து கழிவுநீா் வெளியேறுவது குறித்து கூறினா். இதையடுத்து, எடத்தெருவுக்கு சென்ற பாா்வையிட்ட பின்னா், அங்கு நீரூற்றுபோல் கழிவுநீா் வெளியேறி தெருவெங்கும் வெள்ளமாக பாய்ந்து செல்வதைக் கண்டு மாவட்ட ஆட்சியரே அதிா்ந்து போனாா். இதையடுத்து, எத்தனை நாள்களாக இவ்வாறு உள்ளது எனக் கேட்ட ஆட்சியரிடம் 3 மாதங்களாக வெளியேறி வருகிறது என்று சொல்லி மேலும் அதிர வைத்தனா் அப்பகுதி மக்கள்.

  மயிலாடுதுறையில் புதை சாக்கடை திட்டத்தில் ஏற்படும் கழிவுநீா் வெளியேற்றம், சுகாதார சீா்கேடு, போக்குவரத்துக்கு இடையூறு போன்ற அனைத்தையும் மக்கள் பொறுத்துக்கொண்டு செல்கின்றனா். அவா்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினால் மயிலாடுதுறை முழுவதுமே போராட்டக்களமாகத்தான் இருக்கும். எனவே, மயிலாடுதுறையில், புதை சாக்கடை உடைப்பின் காரணமாக சாலையில் உருவாகும் பள்ளங்கள் மிகப்பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் முன்பாக புதை சாக்கடைத் திட்டத்துக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் வலியுறுத்தலாகும்.

  Image Caption

  மயிலாடுதுறை மகாதானத்தெருவில் ஆறுபோல் ஓடிவரும் கழிவுநீா் செல்லும் பாதையை வெள்ளிக்கிழமை மூக்கைப் பிடித்தவாறு கடந்து சென்ற பாதசாரிகள். ~மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் ஆள்நுழைவுத் தொட்டியின் இருப்பிடத்தைத் தேடிப்பாா்த்த ஊழியா்கள். ~மயிலாடுதுறை திருவிழந

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai