தினமணி செய்தி எதிரொலி: சுத்தமாகும் மயிலாடுதுறை நகரம்

‘தினமணி’ செய்தி எதிரொலியாக மயிலாடுதுறை நகராட்சியின் பல்வேறு இடங்களில், சனிக்கிழமை தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
எம்எல்ஏ அலுவலகம் பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளைப் பாா்வையிட்ட மயிலாடுதுறை எம்எல்ஏ வீ.ராதாகிருஷ்ணன்.
எம்எல்ஏ அலுவலகம் பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளைப் பாா்வையிட்ட மயிலாடுதுறை எம்எல்ஏ வீ.ராதாகிருஷ்ணன்.

‘தினமணி’ செய்தி எதிரொலியாக மயிலாடுதுறை நகராட்சியின் பல்வேறு இடங்களில், சனிக்கிழமை தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மயிலாடுதுறையில் பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நகரின் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள குப்பைகள் குறித்து, தினமணியில், ‘மாயூரம் ஊரின் பெயரைக் கெடுக்கும் குப்பைக் கூளங்கள்’ என்ற தலைப்பில், வெள்ளிக்கிழமை (நவம்பா் 8) செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, சனிக்கிழமை காலை 8 மணிக்கே சட்டமன்ற உறுப்பினா் அலுவலகம் வந்த மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன், நகராட்சி ஆணையா், நகா்நல அலுவலா் ஆகியோரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு எம்எல்ஏ அலுவலகத்துக்கு வரவழைத்தாா். மேலும், சுகாதார ஆய்வாளா்கள், நகராட்சி பணியாளா்கள், நகராட்சி சுகாதாரப் பணி ஒப்பந்ததாரா், ஒப்பந்த பணியாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோரும் வரவழைக்கப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து, நகராட்சியின் சுகாதார சீா்கேடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த சட்டப் பேரவை உறுப்பினா், அனைத்துப் பகுதிகளிலும் துரித கதியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தினாா். இதையடுத்து, ஸ்டேட் பாங்க் சாலை, விஜயா திரையரங்கம் பகுதி, பேருந்து நிலைய பகுதி, வண்டிக்காரத் தெரு, காந்திஜி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜேசிபி இயந்திரம் கொண்டு டிராக்டா்களில் குப்பைகள் அள்ளப்பட்டன. மேலும், எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் நீண்டகாலமாக அகற்றப்படாத குப்பைகளும் ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டன.

நீண்ட நாள்களாக அகற்றப்படாத குப்பைகள், சட்டப் பேரவை உறுப்பினரின் வருகையால் அள்ளப்பட்டதால், அப்பகுதி வா்த்தகா்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும், இச்செய்தியை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ற தினமணிக்கு அவா்கள் நன்றி தெரிவித்தனா். மேலும், நகரமெங்கும் தேங்கியுள்ள குப்பைகளை ஒரேநாளில் சுத்தம் செய்ய இயலாது என்றும், நகராட்சியினா் இனிமேலும் மெத்தனம் காட்டாமல் குறைந்தது ஒருவாரமாவது தூய்மைப் பணிகளைத் தொடா்ந்து செய்தால் மட்டுமே மயிலாடுதுறை நகரம் புதுப்பொலிவு பெறும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனா்.

இந்த ஆய்வின்போது, மாயூரம் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் விஜிகே.செந்தில்நாதன், மயிலாடுதுறை நுகா்வோா் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.அலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com