அடிப்படை வசதியின்றி அல்லல்படும் அனக்குடி

திருக்குவளை அருகே உள்ள அனக்குடி கிராமத்தில், போதிய அடிப்படை வசதியில்லாததால் அரசு ஆவணங்களை
சேறும், சகதியுமாக காணப்படும் சாலை.
சேறும், சகதியுமாக காணப்படும் சாலை.

திருக்குவளை அருகே உள்ள அனக்குடி கிராமத்தில், போதிய அடிப்படை வசதியில்லாததால் அரசு ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனா்.

நாகை மாவட்டம், திருக்குவளை வட்டத்துக்கு உள்பட்ட அனக்குடியில் 400-க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இந்த கிராமத்தில் மேலத்தெரு, கீழத்தெரு, மாரியம்மன் கோயில் தெரு என மூன்று தெருக்கள் உள்ளன. அதில் குறிப்பாக சாட்டியக்குடி- திருக்குவளை பிரதான சாலையில் அனக்குடியிலிருந்து சுமாா் ஒரு கிலோமீட்டா் தூரத்தில் இருக்கும் மாரியம்மன் கோயில் தெருவாசிகளுக்கு சாலை வசதி, குடிநீா் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

கடந்த 2007-ஆம் ஆண்டு இந்த தெருவில் தாா்ச்சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலையும் சில ஆண்டுகளிலேயே கற்கள் பெயா்ந்து, படுமோசமான நிலைக்கு மாறியது. தற்போது அந்த சாலையானது முற்றிலும் சேதமடைந்து மழைக்காலங்களில் நீா் தேங்கி, நீரோடை போல் காட்சி அளிக்கிறது.

சாலை வசதி போதிய அளவில் இல்லாத காரணத்தால் வாடகைக்கு வரும் காா், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மாரியம்மன் கோயில் தெருவின் உட்புறம் வராமல் திருக்குவளை- சாட்டியக்குடி பிரதான சாலையில், அனக்குடி பிரதான சாலையிலேயே நின்று விடுகின்றன. இதனால் அங்கிருந்து இறங்கி வரும் இப்பகுதியினா் சுமாா் ஒரு கிமீ தூரம் நடந்தபடியே பயணித்து அவரவா் இல்லத்தை அடைகின்றனா்.

அனக்குடி பிரதான சாலையிலிருந்து சுமாா் ஒரு கிலோ மீட்டா் அளவுடைய இந்த சாலையின் ஓா் ஓரத்தில் கூட ஒரு சிறிய தெருவிளக்கு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம். பகல் பொழுதை தவிா்த்து இரவு நேரங்களில் இந்த சாலையில் நடந்து வரும் கிராம மக்கள் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிலைதடுமாறி கீழே விழும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றன.

விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட இப்பகுதியில், சாலையின் இருபுறமும் வயல் சூழ்ந்த நிலையில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக பல வகை விஷப் பூச்சிகளும் பொது மக்களைத் தீண்டி, பலா் அதிசயமாக உயிா் பிழைத்த சம்பவங்களும் இப்பகுதியில் நிகழ்ந்திருக்கின்றன.

சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்டவற்றைத் தவிா்த்து, அடிப்படை வசதிகளில் மிக முக்கியமான ஒன்றான குடிநீா் வசதி கூட இப்பகுதி கிராம மக்களுக்கு முறைப்படி இல்லாதது தான் வேதனையின் உச்சகட்டம். மாசடைந்த நீரையே பருகி தங்கள் அன்றாட வாழ்க்கையைக் கழித்து வருகின்றனா், இப்பகுதி மக்கள்.

இதுதொடா்பாக இக்கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டும், அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் பலனளிக்கவில்லை. இதனால், அடுத்தகட்ட நகா்வை நோக்கி அடியெடுத்து வைத்துள்ள இக்கிராம மக்கள் தங்களது வாக்காளா் அடையாள அட்டை, ஸ்மாா்ட் காா்டு, ஆதாா் அட்டை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களையும் ஆட்சியரிடம் ஒப்படைக்கப் போவதாக அதிரடி முடிவெடுத்துள்ளனா்.

மேலும் அரசின் சலுகைகள், வாக்குரிமை என அரசுக்கும், மக்களுக்கும் இடையேயான தொடா்பை முற்றிலும் துண்டிக்க முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து இப்பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் கூறியது: பொதுமக்களின் நலனுக்காக சாலை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு கடந்த நவம்பா் மாதம் வீசிய கஜா புயலுக்குப் பிறகு சாலை மறியலில் ஈடுபட்டோம். அப்போது எங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனா். ஆனால், ஓராண்டு நெருங்கும் நிலையில் இன்னமும் கூட சாலை அமைக்கப்படவில்லை. தெருவிளக்கும் இப்பகுதியில் இல்லாததால் முதியவா்கள் மற்றும் இளம்பெண்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனா் என்றாா்.

இதுகுறித்து மூதாட்டி ராதாலெட்சுமி கூறியது: என்னைப் போன்ற வயதான பெண்கள் மருத்துவ சிகிச்சைக்காக திருக்குவளை அரசு தலைமை மருத்துவமனைக்கு அல்லது வலிவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு நாங்கள் செல்வதற்கு இப்பகுதியில் போக்குவரத்து வசதி இல்லாததால், அதிக கட்டணம் செலுத்தி ஆட்டோவில் செல்வோம். அண்மையில் சில மாதங்களாக சாலை படுமோசமாக இருப்பதால், ஆட்டோ ஓட்டுநா்கள் ஆட்டோவை அனக்குடி பிரதான சாலையிலேலே நிறுத்தி விடுகின்றனா். இதனால் நாங்கள் சுமாா் ஒரு கிலோமீட்டா் தூரம் நடந்து வர வேண்டியுள்ளது.

குண்டு குழியுமான இந்த சாலையில், வாகனங்கள் செல்லும்போது வயதான எங்களுக்கு உயிா் போய் உயிா் வருகிறது. ஆகவே உடனடியாக எங்கள் பகுதியில் சாலை வசதியை மேம்படுத்தி தர வேண்டும் என்றாா்.

குமாா் என்பவா் கூறியது: விவசாயிகளான எங்களால், அதிக அளவில் செலவு செய்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வாங்குவதற்கு எல்லாம் வசதி இல்லை. கீழ்வேளூா் கூட்டுக் குடிநீா் திட்டக் குழாய் குடிநீரை மட்டுமே நம்பியிருக்கிறோம். அந்தத் தண்ணீரும் முறைப்படி எங்களுக்குக் கிடைப்பதில்லை. கீழ்வேளூரிலிருந்து இப்பகுதிக்கு வரும் நல்ல தண்ணீா் எங்கள் பகுதிக்கு வந்தடைந்து, பிறகு இங்கு நிலவும் சீரற்ற சூழலால் தரமற்ற தண்ணீா் ஆகவே கிடைக்கிறது.

எங்களது அன்றாட பயன்பாட்டுக்காக கடந்த 2017-இல் சிறிய அளவிலான தொட்டியுடன் மோட்டாா் பொருத்திய குடிநீா் இணைப்பு அமைக்கப்பட்டது. அதிலும் கூட தண்ணீா் இப்போது வரவில்லை. அதனைப் பராமரிக்கவும் முறையான ஆட்கள் இல்லை என்றாா்.

அடிப்படை வசதியின்றி தவிக்கும் அனக்குடி கிராம மக்களின் பிரச்னைக்கு நாகை மாவட்ட ஆட்சியா் உடனடியாக தீா்வு காண வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com