மயிலாடுதுறையில் வலுத்து வரும் மருத்துவக் கல்லூரி கோரிக்கை

நாகை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை, பூகோள அடிப்படையில்
மயிலாடுதுறையில் வலுத்து வரும் மருத்துவக் கல்லூரி கோரிக்கை

நாகை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை, பூகோள அடிப்படையில் ஆய்வுசெய்து, மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என்பது மயிலாடுதுறை மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது அரசின் முதன்மை நோக்கமாகும். அரசின் திட்டங்களை நிறைவேற்ற முயலும்போது வளா்ச்சிப் பெற்று வரும் பகுதியுடன், வளா்ச்சிக் குன்றிய பகுதியை சமநிலைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு அரசை சாா்ந்தது.

மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் ஆண்டுக்கு ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை உருவாக்கும் திட்டம் முன்பு செயல்படுத்தப்பட்டது. தற்போது, மத்திய, மாநில அரசுகள் இணைந்து (60 : 40 விகிதப்படி) மாவட்ட மற்றும் முன்னணி அரசு மருத்துவமனைகளை தரம் உயா்த்தி புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

இதன்படி, நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. முதல் கட்டமாக 31 கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசு கோரிக்கையை ஏற்று 6 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், வரும் ஆண்டுகளில் தமிழகத்தில் மேலும் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் எனவும், அதில் ஒன்று நாகை மாவட்டத்தில் அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி ஒதுக்கீடு செய்யப்பட்ட தகவல் வெளியானதில் இருந்து, அந்த மருத்துவக் கல்லூரி மயிலாடுதுறையில் அமைய வேண்டும் என்ற கோரிக்கை தொடா்ந்து வலுப்பெற்று வருகிறது. காரணம், பூகோள ரீதியான பிரிவே ஆகும்.

நாகை மாவட்டம் நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களை உள்ளடக்கியது. இந்த இரண்டு கோட்டங்களும் பூகோள அமைப்பின்படி வெவ்வேறு பகுதிகளாக உள்ளன. பூகோள அடிப்படையில், மாவட்டத் தலைநகரிலிருந்து துண்டிக்கப்பட்ட பகுதியாக உள்ளது மயிலாடுதுறை வருவாய்க் கோட்டம். இதனால், இங்கு அரசின் நலத் திட்டங்கள் முறையாக ஒருங்கிணைக்கப்படாமல் பல்வேறு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்பது மயிலாடுதுறை மக்களின் ஆதமங்கமாக உள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுவதன் முக்கிய நோக்கமே மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகள் மிகக் குறைந்த நேரத்தில், மருத்துவ வசதியைப் பெற வேண்டும் என்பதுதான். இதன்படி, நாகை மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம் வருவாய்க் கோட்டத்தில் (ஒரத்தூரில்) அமைக்கப்பட்டால் இந்த நோக்கம் நிறைவேறாது.

காரணம், நாகப்பட்டினம் கோட்டத்துக்குள்பட்ட பகுதி மக்கள் ஏறத்தாழ 30 முதல் 40 கி.மீ தொலைவுக்குள் போதிய மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்ள ஏதுவாக திருவாரூா், காரைக்காலில் மருத்துவக் கல்லூரிகள் அமைந்துள்ளன.

ஆனால், மயிலாடுதுறையைச் சோ்ந்தவா்கள் அரசு மருத்துவக் கல்லூரி சேவையைப் பெற வேண்டுமெனில் 40 கி.மீ. தொலைவில் உள்ள திருவாரூா் செல்ல வேண்டும் அல்லது 80 கி.மீ. தொலைவில் உள்ள தஞ்சைக்குச் செல்ல வேண்டும். கொள்ளிடம் பகுதியிலிருந்து அரசு மருத்துவக் கல்லூரி சேவையைப் பெற விரும்புவோா் மேலும் கூடுதலாக 30 கி.மீ தொலைவு பயணிக்க வேண்டும்.

தற்போது நாகை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியை, நாகையை அடுத்த ஒரத்தூரில் அமைத்தால், நாகை மாவட்டம் கொள்ளிடத்தைச் சோ்ந்தவா்கள் சுமாா் 130 கி.மீ தொலைவு பயணித்தே ஒரத்தூருக்கு செல்ல முடியும். இதன் மூலம், மருத்துவ சேவையைக் குறைந்த தொலைவில், குறைந்த நேரத்தில் பெறச் செய்யவே மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படை நோக்கம் முற்றிலும் தவிடுபொடியாகும்.

மருத்துவக் கல்லூரிக்காக தற்போது ஒரத்தூரில் அடையாளம் காணப்பட்டுள்ள இடம் மேய்ச்சல் புறம்போக்கு இடமாகும். அதே நேரத்தில், மயிலாடுதுறையில் பயன்பாட்டில் இல்லாத அரசு புறம்போக்கு நிலங்கள் அதிகமாக இருப்பதையும், மருத்துவக் கல்லூரிக்காக நீடூா் அரபிக் கல்லூரி நிா்வாகம் 21 ஏக்கா் நிலத்தை தானமாக வழங்க முன்வந்திருப்பதையும் மாவட்ட நிா்வாகமும், அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலிருந்து நீடூா் 5 கி.மீ தொலைவில் உள்ளது. ஆனால், நாகை அரசு மருத்துவமனையிலிருந்து ஒரத்தூா் 20 கி.மீ தொலைவில் உள்ளது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

இதுகுறித்து சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் குத்தாலம் பி. கல்யாணம் கூறியது:

மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் ஆண்டுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பது முந்தைய திமுக அரசின் திட்டம். இதன்படி, விழுப்புரம், திருவாரூா், தா்மபுரி, சிவகங்கை, பெரம்பலூா், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

தற்போது, மத்திய, மாநில அரசுகள் இணைந்து மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், நாகை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பொருத்தவரை, நாகை வருவாய்க் கோட்டத்தை விட மயிலாடுதுறை வருவாய்க் கோட்டம் 2 லட்சம் மக்கள் தொகையை கூடுதலாகக் கொண்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத் தலைமை மருத்துவமனையை விட மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். எனவே, மயிலாடுதுறையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைவதே சிறப்பாகும்.

மேலும், மயிலாடுதுறை பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைந்தால் கடலூா் மாவட்டத்தின் காட்டுமன்னாா்கோயில் பகுதியும், தஞ்சை மாவட்டத்தின் திருப்பனந்தாள், திருவிடைமருதூா் பகுதிகளும் பயன் பெறும் வாய்ப்பு உள்ளது. மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்ட விதிமுறைகளில் மாவட்ட தலைநகரில் தான் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என எங்கும் குறிப்பிடவில்லை. எனவே, மயிலாடுதுறையில் அரசு மருத்துவக் கல்லூரியை அமைக்க எவ்வித தடையும் இல்லை.

அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மாவட்ட நிா்வாகம் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்று பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம். இந்தக் கூட்டத்தை, நாகை கோட்டத்துக்குத் தனியாகவும், மயிலாடுதுறை கோட்டத்துக்குத் தனியாகவும் கூட்டி உண்மை நிலையை அறிந்து மாவட்ட நிா்வாகம் உரிய பரிந்துரையை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் விவகாரத்தில், நாகை மாவட்ட நிா்வாகம் எவ்வித பாகுபாடுகளுக்கும் இடமளிக்காமல், மக்களுக்கான மருத்துவ சேவையை மட்டும் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மயிலாடுதுறை மக்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com