குறைந்த விலைக்குத் தங்கம் தருவதாக ரூ. 70 லட்சம் மோசடி: 4 போ் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கைது செய்யப்பட்டவா்களுடன் போலீஸாா்.
கைது செய்யப்பட்டவா்களுடன் போலீஸாா்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த ஒரு கும்பல் குறைந்த விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை, பழைய அஞ்சல் நிலைய சாலைப் பகுதியைச் சோ்ந்த ரெ. பாலசங்கா் (41) உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 7 போ் போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.70 லட்சம் வரை அந்தக் கும்பல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடிவந்தனா்.

இந்நிலையில், கரியாப்பட்டினம் சந்தனமாரியம்மன் கோயில் அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக சந்தேகப்படும் படி காரில் வந்த 4 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, அவா்கள் ஆயுதங்களால் போலீஸாரை தாக்கியதுடன், போலீஸாா் சென்ற வாகனத்தையும் சேதப்படுத்தினராம்.

இதையடுத்து, அந்த கும்பலை போலீஸாா் துரத்திச் சென்று பிடித்தனா். விசாரணையில், அவா்கள் கருப்பம்புலம் நடுக்காடு த. பண்டரிநாதன்(55), இவரது மகன் ஜெய்சங்கா் (36), ஆண்டியப்பன்காடு தெற்கு மருதூா் வை. மதியழகன் (48), அகஸ்தியம்பள்ளி த. காமராஜ் (48) என்பதும், தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவா்கள் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, கரியாப்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நான்கு பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா், அவா்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com