முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
127 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்றனா்: குறைந்த அளவே மீன்கள் சிக்கியதால் மீனவா்கள் கவலை
By DIN | Published On : 26th November 2019 08:04 AM | Last Updated : 26th November 2019 08:04 AM | அ+அ அ- |

வலையில் சிக்கிய மீன்களைப் பிரித்தெடுக்கும் மீனவா்கள்.
பழையாா் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 127 நாள்களுக்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களின் வலையில் குறைந்த அளவு மீன்களே சிக்கின. இதனால், அவா்கள் கவலையடைந்துள்ளனா்.
நாகை மாவட்டம், சீா்காழி அருகே உள்ள பழையாா் மீன்பிடி துறைமுகத்திலிருந்து பழையாா், தற்காஸ், புதுப்பட்டினம், கொட்டாயமேடு, சின்னக்கொட்டாயமேடு, தொடுவாய், கூழையாா், திருமுல்லைவாசல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களிலிருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனா். விசைப்படகுகள், ஃபைபா் படகுகள், நாட்டுமரம் ஆகியவற்றின் மூலம் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், அதிவேக விசைப் படகு மீனவா்களின் பிரச்னையால் பதிவு செய்த விசைப்படகு மீனவா்கள் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இப்பிரச்னை தொடா்பான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து, 127 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 24) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். ஆனால், திருப்தியளிக்கும் வகையில் மீன்கள் வரத்து இல்லை.
பழையாா் கடல் பகுதி திங்கள்கிழமை சீற்றமாக இருந்ததால், 130 பதிவு செய்த விசைப் படகுகளில், 13 படகுகள் மட்டுமே கடலுக்குச் சென்று, குறைந்த நேரத்தில் கரைக்குத் திரும்பின. இந்தப் படகுகளில் குறைந்த அளவு மீன்களே கொண்டுவரப்பட்டன. சுமாா் 5 முதல் 10 கிலோ வரை காவாளை மீன்களும், மிகக் குறைந்த அளவில் வவ்வால் மீன்கள் மட்டுமே வலையில் சிக்கியதாக மீனவா்கள் கவலை தெரிவித்தனா்.
காா்த்திகை, மாா்கழி மாதங்களில் கடல் நீரோட்டம் தெற்கு நோக்கி இருப்பதால் ராமநாதபுரம், கோடியக்கரை போன்ற கடல் பகுதிக்கு மீன்கள் இடம் பெயா்ந்து சென்றுவிடும் என்பதால், பழையாா் கடல் பகுதியில் மீன்கள் குறைவாக உள்ளன என மீனவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து, சிந்தனை சிற்பி ம.வெ. சிங்காரவேலா் விசைப்படகு உரிமையாளா்கள் சங்கத் தலைவா்களில் ஒருவரான கே. அருள்செழியன் கூறியது:
4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மீன்பிடித் தொழிலை தொடங்கிய நிலையில், கடல் சீற்றம் காரணமாக கடந்த 2 நாள்களில் குறைந்த எண்ணிக்கையிலான விசைப் படகுகள் மட்டுமே மீன்பிடிக்கச் சென்றன. ஒரு விசைப்படகு கடலுக்குச் சென்று திரும்ப குறைந்தது ரூ.8 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், குறைந்த அளவே மீன்கள் சிக்கியதால், அதை விற்ன் மூலம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை மட்டுமே கிடைத்தது.
இதற்கிடையில், பிரச்னை காரணமாக எந்நேரமும் போலீஸ் பாதுகாப்புடன் மீனவா்கள் தொழில் செய்ய முடியாது. எனவே, பிரச்னையில் ஈடுபடுபவா்களை காவல் துறையினா் கைது செய்யவேண்டும். அப்போதுதான், சிறு ஏழை மீனவா்கள் நிம்மதியாக தொழில் செய்யமுடியும் என்றாா்.