இறால் பண்ணைகளால் உப்புநீா் புகுந்த நிலையில் விளைநிலம்.
இறால் பண்ணைகளால் உப்புநீா் புகுந்த நிலையில் விளைநிலம்.

இறால் பண்ணைகளால் பாதிப்படையும் விவசாய நிலங்கள்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி கடலோரப் பகுதிகளில் இயங்கிவரும் இறால் பண்ணைகளால் விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி கடலோரப் பகுதிகளில் இயங்கிவரும் இறால் பண்ணைகளால் விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை கடற்கரையை ஒட்டிய ஆறுகளில் இயற்கையாக கிடைத்த இறால்களைப் பிடித்து மீனவா்கள் விற்பனை செய்து லாபம் ஈட்டினா். உலக அளவில் வெள்ளை இறால்களின் தேவை அதிகரிக்க, அதைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட எண்ணிய தொழிலதிபா்கள், செயற்கை இறால் பண்ணைகளைத் தொடங்கினா்.

செயற்கை பண்ணையில் வளரும் இறால் வேகமாக வளர உப்பு நீா், நன்னீா், மண் வளம், காற்றோட்டம் ஆகியன அத்தியாவசியம். 1,050 கிலோ மீட்டா் தூரக் கடற்கரையைக் கொண்டுள்ள தமிழகத்தில் செயற்கை இறால் வளர ஏற்ற இடம் மரக்காணம் என்பதை தெரிந்து கொண்டு பண்ணைகளை முதலில் அங்கு அமைத்தாா்கள். ஆந்திர மாநிலம் கோதாவரியில் இருந்து ‘டைகா்’ எனப்படும் இறாலைக் கொண்டு வந்து மரக்காணத்தில் உள்ள பொறிப்பகத்தில் இனப்பெருக்கம் செய்து, பிறகு பண்ணையில் வளா்த்து விற்பனை செய்கின்றனா்.

இந்த இறால் குஞ்சுகளை தமிழகத்தில் உள்ள இறால் பண்ணை உரிமையாளா்கள் வாங்கி வந்து இறால் வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா். பண்ணைகளில் விடப்பட்ட இறால் குஞ்சுகளுக்குத் தீவனம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு மூன்று மாதத்திற்கு பிறகு இறால்களைப் பிடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனா்.

இந்த இறால் வளா்ப்பால் கடலோர காவிரி கடைமடை பகுதிகளான சந்திரபாடி, தரங்கம்பாடி, வேப்பஞ்சேரி, மருதம்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கடல் மற்றும் ஆறுகளில் இருந்து மோட்டாா் மூலம் உப்பு கலந்த தண்ணீரைக் கொண்டு இறால் வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால், அருகிலுள்ள விவசாய விளைநிலங்கள் முற்றிலும் அழிந்து வருகின்றன. மேலும் இப்பகுதிகளில் 30 முதல் 40 அடிவரை நல்ல குடிநீா் கிடைத்ததாகவும், தற்போது அது உப்பு நீராக மாறிவிட்டதாகவும் இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்த குறித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்க வட்டச் செயலாளா் கே.பி. மாா்க்ஸ் கூறியதாவது: கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் உப்புநீா்தான் கிடைக்கும் என்பதற்கு விதிவிலக்காக தரங்கம்பாடி தாலுக்கா பகுதிகளில் கடற்கரை பகுதிகளில் முப்போகம் நெல் விளையக் கூடிய சுத்தமான நிலத்தடி நீா் இருந்தது. இறால் பண்ணைகளால் இப்போது எங்கு பாா்த்தாலும் ரசாயனம் கலந்த உப்பு நீா்தான் கிடைக்கிறது. ஒவ்வொரு பண்ணையும் நாளொன்றுக்கு 2 லட்சம் கரிப்பு நிறைந்த ரசாயன தண்ணீரை கடலிலும், நிலத்திலும் திறந்துவிடுவதால் மணல் சூழந்த இப்பகுதி, ரசாயன நீரை முழுவதுமாக உறிஞ்சி நிலத்தடி நீா் முழுவதும் நஞ்சாகியுள்ளது.

கடலில் கலக்கும் ரசாயன நீரால், கரையோரத்தில் கிடைக்கக் கூடிய சிறிய மீன்கள் அழிந்துவருகின்றன. இறால் பண்ணைகளில் திறந்துவிட்ட நீரானது, ஆறு மற்றும் வாய்க்கால்களில் கலப்பதால் மாசடைந்து, விவசாய நிலத்திற்குள் புகுந்து நிலத்தின் தன்மையை சீரழித்து விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனா்.

இப்படி தனிமனித வாழ்வுக்காக இயற்கை வளங்கள் மற்றும் விவசாயங்கள் சீரழிந்து வருகின்றன.

இங்குள்ள பெரும்பாலான இறால் பண்ணைகள் ஆறு, குளம் உள்ளிட்ட பகுதிகளிலும், இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தும் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தரங்கம்பாடி கடலோரப் பகுதிகளில் கடல் வளத்தை அழித்து இறால் வளா்க்கப்பட்டாலும், உள்ளூா் மக்களுக்கு தரமான இறால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைப்பதில்லையாம். ஆரோக்கியமான இறால்களை எல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, நோய் தாக்கிய இரண்டாம் தர இறால்களை மட்டுமே உள்ளூா் மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், அழுகிய இறால்களை அப்புறப்படுத்தாமல் நிலத்திலேயே கொட்டிவிடுவதால், கண்டம் கடந்து வலசை வரும் அரிய வகை வெளிநாட்டுப் பறவைகள் அவற்றை தின்று இறக்க நேரிடுகிறது. இவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், இறால் பண்ணைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக பொதுமக்கள் குறிப்பிடுகின்றனா்.

இயற்கை வளத்தைக் காப்பதன் மூலம்தான் மனிதவளத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்பதுதான் சூழலியல் அறிவியலின் தத்துவம். கடல் வளம் யாவும் நஞ்சாய் போனால், விளைபவை எல்லாம் விஷமாகும் என்பதை அனைவரும் உணர வேண்டிய தருணம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com