Enable Javscript for better performance
பள்ளி மாணவியருக்கு உணவளிக்க சொந்தப் பணத்தில் அறக்கட்டளையை நிறுவிய ஆசிரியர்- Dinamani

சுடச்சுட

  

  பள்ளி மாணவியருக்கு உணவளிக்க சொந்தப் பணத்தில் அறக்கட்டளையை நிறுவிய ஆசிரியர்

  By DIN  |   Published on : 06th October 2019 06:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tamilselvan


  நாகை மாவட்டம், வேதாரண்யத்தில், தனது மகள்கள் 4 பேர் படித்த குருகுலம் பள்ளியில், தற்போது படிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு  உணவளிக்கும் நோக்கத்துக்காக பணி ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவர் ரூ. 3 லட்சத்தில் அறக்கட்டளை நிறுவியுள்ளார்.  இதற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
  வேதாரண்யம், யானைக்கட்டித் தெருவில் வசித்து வருபவர் ராமையா} மீனாட்சி தம்பதியரின் மகன் தமிழ்ச்செல்வன். பணி ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி தமிழாசிரியர். இவரது மனைவி முல்லை. இவரும் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
  முதுகலைப் பட்டம் பெற்ற ஆசிரியர் தமிழ்ச்செல்வன், தனது ஆசிரியர் பணியை கரியாப்பட்டினத்தில் உள்ள பள்ளியில் தொடங்கி, வேதாரண்யம், குறிச்சி, திருத்துறைப்பூண்டி, தலைஞாயிறு ஆகிய இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றி, ஆயக்காரன்புலம் நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிநிறைவு செய்துள்ளார்.
  கல்வியைக் கற்பிக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட ஆசிரியர் தமிழ்ச்செல்வன், பாடப் புத்தகங்களில் இருக்கும் பாடங்களோடு, நன்னெறிக் கதைகள், சுவையான சம்பவங்களை கூறி மாணவர்களை அன்பால் நெறிப்படுத்துவது இவரது சிறப்பு.
  தனது வாழ்க்கை துணைவியாக ஏற்றுக்கொண்ட முல்லையை திருமணத்துக்குப் பிறகுதான்  ஆசிரியர்  பயிற்சியை கற்கச் செய்து, பின்னாளில் அவரையும் ஆசிரியையாக சேவை செய்ய வைத்தார்.
  இத்தம்பதிக்கு பிறந்த 4 குழந்தைகளும் பெண் குழந்தைகள் என்பதால், சமூகம் இவருக்கு ஆண் வாரிசு இல்லை எனக் கேலி பேசியது. இதனால், தனது மகள்களை பாலினப் பாகுபாடு இல்லாமல்  ஆண் குழந்தைக்கு நிகராக வளர்த்தார். இதனால், நால்வரில்  முதல் மகள் அமுதாதேவி பி.இ., எம்.பி.ஏ. படித்துவிட்டு, பன்னாட்டு தொழில் நிறுவனத்தில்  பொது மேலாளராகப் பணியாற்றுகிறார்.
  இரண்டாவது மகள் ஆனந்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர். மூன்றாவது மகள் கோப்பெரும்தேவி முதுகலை ஆசிரியராகவும், நான்காவது  மகள் கவிதா கல்லூரி பேராசிரியராகவும்  பணியாற்றுகின்றனர். ஒருகாலத்தில் பெண் பிள்ளைகள்தானே எனக்  குறை கூறியவர்கள் இன்று மூக்கின்மீது விரலை வைத்து வியந்து போகும் அளவுக்கு அவர்களது வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது.
  இது ஒரு பக்கம் இருக்க, தனது மகள்கள் நால்வருக்கும் தமிழ்வழியில் கல்வியைத் தந்ததோடு நல்ல ஆளுமையை, வாழ்வியலை  கற்றுத்தந்தது அவர்களுக்கு அடிப்படை கல்வியை கற்பித்த பள்ளி என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர்.
  இந்த நம்பிக்கையை உறுதி செய்யவும், அந்த பள்ளிக்கு தங்களது நன்றியை தெரிவிக்கவும் இந்த ஆசிரியர் தம்பதியர் செய்த செயல்பாடு பலரையும் வியக்கச் செய்கிறது.
  வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடத்திய சர்தார் அ. வேதரத்னம் நிறுவிய கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிதான் இவர்களது மகள்கள் படித்தப் பள்ளி. இந்த பள்ளியில் நலிந்த, ஆதரவற்ற, ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேலான மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு குருகுலம் முறையில் ஏராளமான மாணவிகள் உணவுடன் தங்கியும் படிக்கின்றனர். இந்த நிலையில், இங்குப் படிக்கும் மாணவிகளுக்கு பள்ளியின் தந்தை சர்தார் வேதரத்னம் நினைவு நாளில் அளிக்கப்படும்  சிறப்பு உணவில் தங்களது பங்களிப்பையும் செய்யும் வகையில், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வன், முல்லை என்ற பெயரில்  அறக்கட்டளையை நிறுவி ரூ. 3 லட்சத்து 300}யை வைப்பு நிதியாக அளித்து, அதில் வரும் வட்டித் தொகையை சிறப்பு உணவுக்குப் பயன்படுத்தவும் வகை செய்துள்ளனர். 
  மகள்கள் படித்த பள்ளியின் நிறுவனர் சர்தார் வேதரத்னம் நினைவு நாளில் ஏதோ ஒரு வகையில் நாங்களும் நினைவு கூரப்படுவோம் என நம்பிக்கை தெரிவிக்கும்  அந்த ஆசிரியர் தம்பதியின் எதிர்பார்ப்புதான் அவர்களது வாழ்நாள் விருப்பமாக உள்ளது. பெண்ணுரிமை, பெண் சமூக முன்னேற்றத்தை பேச்சளவில் இல்லாமல், செயல்பாட்டின் மூலம் ஓசைப்படாமல்  செய்துவரும் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளிஆசிரியரின் இந்த செயல்பாடுகள் சமூக ஆர்வலர்களிடையே பாராட்டைப்பெற்றுவருகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai