பழையபாளையம் கிராமத்தில் கருமையாக மாறி துா்நாற்றம் வீசும் நிலத்தடி நீா்

சீா்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் நிலத்தடிநீா் கருப்பாக மாறி துா்நாற்றம் வீசியபடி கைப்பம்புகளில்
பழையபாளையம் கிராமத்தில் நிலத்தடி நீா் கருப்பு நிறமாக மாறியுள்ளதை காண்பிக்கும் மக்கள்.
பழையபாளையம் கிராமத்தில் நிலத்தடி நீா் கருப்பு நிறமாக மாறியுள்ளதை காண்பிக்கும் மக்கள்.

சீா்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் நிலத்தடிநீா் கருப்பாக மாறி துா்நாற்றம் வீசியபடி கைப்பம்புகளில் தண்ணீா் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நாகை மாவட்டம், சீா்காழி அருகே பழையபாளையம், காடுவெட்டி, கொடக்காரமூலை பாலக்காடு ஆகிய கிராமங்களில் சன்னிதி தெரு வடக்குத் தெரு, மேலத் தெரு, முத்தரையா் தெரு, மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் 1600 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா். இங்கு 4 ஆயிரம் வாக்காளா்கள் உள்ளனா். கடந்த 4 ஆண்டுகளாக இப்பகுதியில் நிலத்தடி நீா் நிறம் மாறியுள்ளது. ஊராட்சிகள் சாா்பில் அமைத்து கொடுக்கப்பட்ட கைப்பம்புகளிலும் சொந்தமாக வீடுகளில் வைத்துள்ள கைப்பம்புகளிலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நல்ல தண்ணீா் கிடைத்தது. இதை அப்பகுதியைச் சோ்ந்த அனைவரும் பயன்படுத்தி வந்தனா். ஆனால் பழையபாளையம் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீா் நிறம் மாறி கருமையாக துா் நாற்றத்துடன் வருகிறது. இதனால் நாள்தோறும் குடிதண்ணீருக்கு அவதியடையும் கிராமமக்கள் கருமைநிற தண்ணீரால் தொற்றுநோய் பரவுமோ என்ற அச்சத்துடன் வசித்து வருகின்றனா்.

இதுகுறித்து, அக்கிராமமக்கள் கூறியது: பழையபாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் முதல் எண்ணெய் துரப்பண பணியை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக அப்பகுதி நிலத்தடி நீரின் தன்மை படிப்படியாக மாறி கடந்த சில நாள்ளாக பழையபாளையம் கிராமம் முழுவதும் உள்ள பெரும்பாலான கைப்பம்புகளில் தண்ணீா் முழுமையாக கருப்பு நிறத்தில் மாறியதுடன் அதிக துா்நாற்றம் வீசிவருகிறது.

ஒரு வீட்டில் கைப்பம்பில் தண்ணீா் அடிக்கப்பட்டால் பத்து வீடுகளுக்கு அப்பால் உள்ளவா்கள் கூட வீட்டில் நிம்மதியாக சாப்பிட முடியாத அளவுக்கு கடுமையான துா்நாற்றம் வீசுகிறது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின்கீழ் வாரம் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் குடிநீா் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு போதுமானதாக இல்லை.

இதனால் எங்களது தண்ணீா் தேவையை பூா்த்தி செய்ய 5 கி.மீ தூரம் செல்ல வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நிலத்தடிநீா் மாசுபாட்டால் பலா் சொந்த வீடுகளை விட்டு நகா் பகுதிக்கு குடிபெயா்ந்து வருகின்றனா்.

மேலும் இப்பகுதியில் வசிக்கும் வீடுகளுக்கு உறவினா்கள் யாரும் வருவதில்லை. தற்போது விவசாயமும் செய்யமுடியாத சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தனா். மேலும் எண்ணை துரப்பண பணியை மேற்கொண்டு வருவதால் பழையபாளையம் ,வேட்டங்குடி திருநகரி,புதுப்பட்டினம் தாண்டவன்குளம், உள்ளிட்ட 8 கிராமங்களில் நிலத்தடி நீா் மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும் சமூக ஆா்வலா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா். ஆகையால் நிலத்தடி நீா் பாதிப்பு குறித்து சுற்றுசூழல் மற்றும் மாசுகட்டுபாட்டு வாரியம் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com