20 ஆண்டுகளாக தொடரும் சேவை: டெங்கு காய்ச்சலுக்கு கட்டணமின்றி சிகிச்சையளிக்கும் சித்த வைத்தியர்

20 ஆண்டுகளாக தொடரும் சேவை: டெங்கு காய்ச்சலுக்கு கட்டணமின்றி சிகிச்சையளிக்கும் சித்த வைத்தியர்
20 ஆண்டுகளாக தொடரும் சேவை: டெங்கு காய்ச்சலுக்கு கட்டணமின்றி சிகிச்சையளிக்கும் சித்த வைத்தியர்

டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக கட்டணமின்றி சிகிச்சையளிப்பதுடன், நிலவேம்பு குடிநீரும் இலவசமாக வழங்கிவருகிறார் சித்த வைத்தியர் அஜ்மல்கான்.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரியில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் அஜ்மல்கான். இவர், தனது குடும்ப வறுமையையும் தாண்டி, மிகுந்த சிரமங்களுக்கிடையே மனப்பூர்வமாக இந்த மருத்துவச் சேவையை செய்து வருகிறார். இவரை திருமருகல், நாகூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் தெரியாதவர்களே இருக்க முடியாது. இவரது தந்தை, பாட்டனார் ஆகியோரும் இப்பணியை சேவை நோக்கோடு செய்து வந்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டு காலமாக இப்பணியை செய்துவரும் அஜ்மல்கான், "வரும் முன் காப்போம்' என்ற விழிப்புணர்வு சேவை மையத்தையும் நடத்தி வருகிறார். இதன்மூலம் டெங்கு, மலேரியா மற்றும் மர்ம காய்ச்சலுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் வரை நிலவேம்பு கசாயம் சொந்த பணத்தில் தயார் செய்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறார். மேலும், ஆண்டுதோறும் 100- க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சென்று இந்த சேவையை எதிர்பார்ப்பின்றி செய்து வருகிறார். தொடர்ந்து, அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், காவல் நிலையம், பேருந்து நிலையம், பள்ளிவாசல்கள் மற்றும் கோயில்கள், கடைத்தெரு  உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஸ்டால் அமைத்து, நிலவேம்பு கசாயத்தை வழங்கி வருகிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி அருந்தும் வகையில் பனை வெல்லம், பனங்கற்கண்டு கலந்து நிலவேம்பு கசாயத்தைக் கொடுத்து வருகிறார்.
இந்த நிலவேம்பு கசாயத்தில் நிலவேம்பு, வெட்டி வேர்,விலாமிச்சை வேர், கோரைக் கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம், சந்தனம் உள்ளிட்ட 9 பொருள்களைக் கலந்து தயார் செய்து கொடுக்கிறார். இந்த நிலவேம்பு கசாயத்தின் மூலம் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், செரிமானமின்மை, பித்தம், மூட்டு வலி, எலும்பு வலி, பசியின்மை, உடலில் ஏற்படும் ஒவ்வாம்மை, தோல் அரிப்பு, வாந்தி, தலைவலி, இருமல், தும்மல் என பல்வேறு நோய்களையும் குணப்படுத்தலாம் என தெரிவிக்கிறார் அஜ்மல்கான்.
மேலும், நிலவேம்பு கசாயம் வழங்கும் பள்ளிகள், பள்ளிவாசல்கள், கோயில்கள் மற்றும் பொது இடங்களில் டெங்கு பற்றிய விழிப்புணர்வு நடத்தப்பட்டு, நிலவேம்பு கசாயம் தயார் செய்ய பயன்படுத்தும் மூலிகைகளை அனைவருக்கும் அறிமுகப்படுத்திய பின்னரே நிலவேம்பு கசாயத்தை வழங்குகிறார். இவ்வாறு, திருமருகல் ஒன்றியத்தில் சுமார் 50- க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், டெங்கு மற்றும் மலேரியா நோய்கள் குறித்து துண்டுப் பிரசுரங்களையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
பொதுமக்கள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள் என பலதரப்பு மக்களிடமும் பாராட்டுகளை பெற்ற இவரை மாவட்ட நிர்வாகம் கௌரவிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com