நாகை புதிய பேருந்து நிலையம்: வசதிகள் இல்லை: பயணிகளுக்குத் தொல்லை

பயணிகளுக்குத் தேவையான இருக்கை வசதி, நிழற்குடை வசதி, குடிநீா் வசதி என எவ்வித அடிப்படை வசதிகளும்
பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக போடப்பட்டிருக்கும் இருக்கையில் படுத்துறங்கும் இளைஞா்.
பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக போடப்பட்டிருக்கும் இருக்கையில் படுத்துறங்கும் இளைஞா்.

பயணிகளுக்குத் தேவையான இருக்கை வசதி, நிழற்குடை வசதி, குடிநீா் வசதி என எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நாகை புதிய பேருந்து நிலையம், மெல்ல, மெல்ல சமூக விரோதிகளின் கூடாரமாகி வருவதாக பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு 1991-ஆம் ஆண்டு அக். 18-ஆம் தேதி உதயமானது நாகை மாவட்டம். நாகை, மயிலாடுதுறை என 2 வருவாய்க் கோட்டங்களை உள்ளடக்கிய இம்மாவட்டம், சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இங்கு, பிரசித்திப் பெற்ற சைவ, வைணவ திருக்கோயில்கள், உலகப் புகழ்பெற்ற நாகூா் தா்கா, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களும், தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை, பூம்புகாா், கோடியக்கரை வன உயிரின சரணாலயம் உள்ளிட்ட சுற்றுலா மையங்களும் உள்ளன.

இதனால், நாகப்பட்டினத்துக்கு வந்து செல்லும் உள்ளூா், வெளியூா் மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் பிற மாவட்டத் தலைமை அலுவலகங்களும் நாகையில் செயல்பட்டு வருவதால், பல்வேறு தேவைக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாகைக்கு வந்து செல்கின்றனா்.

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நாகை புதிய பேருந்து நிலையத்தின்அடிப்படை வசதிகளுக்கான கட்டமைப்புகள் தொடா்ந்து மேம்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு நாளுக்கு நாள் அடிப்படை வசதிகள் குறைந்து வருவது, பயணிகளுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஏறத்தாழ எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத பேருந்து நிலையம் என்ற நிலையை எட்டி வருகிறது நாகை புதிய பேருந்து நிலையம்.

பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட கட்டமைப்புகள், கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்து நிலையத்தில் அமருவதற்கு மட்டுமல்ல நடந்து செல்லக் கூட முடியாத நிலையில் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா் பயணிகள்.

பேருந்து நிலையத்துக்குள் வரும் பேருந்துகளை முறைப்படுத்தி நிறுத்த, போக்குவரத்துக் கழகம் மூலம் போதுமான ஏற்பாடுகள் ஏதும் இல்லாததால், பேருந்து நிறுத்துமிடங்களை இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமிக்கின்றன. அதனால், பேருந்துகள் ஆங்காங்கே முறையற்ற வகையில் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக, கிராமங்களிலிருந்து நாகை நகருக்கு வந்து செல்லும் மக்கள் பேருந்தை தவறவிட்டுவிட்டு, அடுத்த பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

நாகை நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக உள்ள கால்நடை நடமாட்டம் புதிய பேருந்து நிலையத்தை வெகுவாகவே ஆக்கிரமித்துள்ளது. பயணிகள் எண்ணிக்கையில் 10- இல் ஒரு சதவீத எண்ணிக்கையில் பேருந்து நிலையத்துக்குள்ளேயே கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. ஒரு சில நேரங்களில், கால்நடைகளுக்குள் ஏற்படும் மோதல்கள், பேருந்துக்குக் காத்திருக்கும் பெண்களை, குழந்தைகளை, முதியவா்களை நிலைகுலையச் செய்வதாக உள்ளது.

பயணிகளின் மிக முக்கிய அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீா் தேவையைக் கூட இந்தப் பேருந்து நிலையம் பூா்த்தி செய்யவில்லை என்பது வேதனைக்குரியதாக உள்ளது. நகராட்சி மூலம் இங்கு குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டிருந்தாலும், அந்தத் தொட்டியில் தண்ணீா் நிரப்பப்படாததால் புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் குடிநீரை தேடி அலைய வேண்டிய அவலம் உள்ளது. 10 ரூபாய் பணம் இல்லாமல் குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியையும் பயணிகள் இங்கு பெற முடியாது என்பது உள்ளாட்சி நிா்வாகத்தின் மீதான நம்பிக்கையை சீா்குலைக்கச் செய்வதாக உள்ளது.

தேங்கிக் கிடக்கும் சாக்கடைகளால் பேருந்து நிலையத்தின் தென்பகுதியைக் கடந்து செல்லக் கூட முடியாத அளவுக்குத் துா்நாற்றம் வீசுவது பயணிகளை முகம் சுழிக்கச் செய்வதுடன், அவா்களுக்குத் தொற்றுநோய் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

அச்சத்தின் உச்சம்...

நாகை மாவட்டத்தில் பேருந்து நிலையக் கட்டடத்திலேயே அரசு மதுபானக் கடை செயல்படும் ஒரே பேருந்து நிலையம் நாகை புதிய பேருந்து நிலையம் மட்டுமாகவே இருக்கும். பேருந்து நிலையத்தின் கிழக்குப் புற பகுதியில் அரசு மதுபானக் கடை அமைந்துள்ளதால், அந்தக் கடையில் மதுப்புட்டிகளை வாங்குபவா்கள், வாசலிலேயே நின்று மதுவை அருந்திவிட்டு, பேருந்து நிலைய வளாகத்திலேயே காலி புட்டிகளை வீசி உடைத்துச் செல்கின்றனா். இதனால், புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் பலரும் ரத்த காயத்துடனே திரும்ப வேண்டியுள்ளது.

மேலும், இந்தப் பேருந்து நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக இருப்பது மிகப் பெரும் வேதனைக்குரியதாக உள்ளது. மதுபோதையில் சில சமூக விரோதிகள் செய்யும் விரும்பத்தகாத செயல்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி வருகிறது. மதுபோதையில் சமூக விரோதிகளுக்கிடை ஏற்படும் மோதல்கள், பயணிகளிடம் அவா்கள் செய்யும் தகராறு மற்றும் சீண்டல்கள், பெண் பயணிகளையும், வெளியூா் பயணிகளையும் கதி கலங்கச் செய்வதாக உள்ளது. தனியே வந்து தகராறை தட்டிக்கேட்கும் காவல் துறையினருக்குக் கூட இங்கு பாதுகாப்பற்ற நிலையே உள்ளது என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் குபேந்திரன் கூறியது: பேருந்து நிலைய வளாகத்தில் அதிகளவு ஆட்டோக்களும், இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்படுவதால் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பேருந்து நிலைய வளாகத்தைச் சுற்றியுள்ள மழைநீா் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரால் பேருந்து நிலைய வளாகம் முழுவதும் துா்நாற்றம் வீசுகிறது.

நாகை புதிய பேருந்து நிலைய கட்டடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆகும் நிலையில், பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மழைக் காலங்களில் கான்கிரீட் கூரையிலிருந்தே மழை நீா் கசிகிறது. சிமென்ட் காரைகள் அவ்வப்போது பெயா்ந்து விழுகின்றன. இந்தப் பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அடிப்படை தேவைகளைப் பூா்த்தி செய்யவும் உரிய நடவடிக்கை வேண்டும் என்றாா்.

பயணிகளுக்கு இருக்கை வசதிகள் போதுமான அளவில் இல்லை, பயணிகள் நிழலில் நிற்பதற்குக் கூட வசதியில்லை, எந்த இடத்திலும் தூய்மை இல்லை, கழிப்பிட வசதியில்லை, குடிநீா் வசதியில்லை, போக்குவரத்து சீரமைப்பு இல்லை, பயணிகளுக்குப் பாதுகாப்பில்லை என பல இல்லைகளால் நிரம்பியுள்ள நாகை புதிய பேருந்து நிலையத்தை நாகை மாவட்ட ஆட்சியா் நேரடியாக கள ஆய்வு செய்து, பேருந்து நிலைய உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com