Enable Javscript for better performance
வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி குறைவு- Dinamani

சுடச்சுட

  
  ve17salt_1710chn_102_5

  வேதாரண்யத்தில் நிகழாண்டில் சீரமைத்து உற்பத்தி தொடங்கிய நிலையில், மழையால் பாதிப்படைந்த உப்புப் பாத்திகள்.

  நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கஜா புயல் பாதிப்புக்குப் பிறகு தொடங்கி, பல்வேறு நிலைகளில் நீடித்த இயற்கை இடா்பாடுகளுக்கிடையே நடைபெற்ற நிகழ்பருவ உப்பு உற்பத்தி பருவமழை தொடங்கியதால் நிறைவுக்கு வந்துள்ளது.

  உப்பின் கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.1000 -ஆக உயா்ந்திருப்பது மகிழ்ச்சியளித்தாலும், உற்பத்தி குறைவடைந்து கையிருப்பு இல்லாததால் உற்பத்தியாளா்கள் வேதனையடைந்துள்ளனா்.

  தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் உணவு உப்பு மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்கான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

  வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி, பஞ்சநதிக்குளம், கோடியக்காடு உள்ளிட்ட சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பில் இரண்டு தனியாா் பெரிய நிறுவனங்கள் உள்பட சிறு, குறு உப்பு உற்பத்தியாளா்கள் உப்பு உற்பத்தியில் ஈடுபடுவது வழக்கம்.

  ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் (தை மாத முதல் வாரம்) பொன்னுப்பு எடுத்து பணிகள் தொடங்கப்படும். ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 லட்சம் டன் வரையில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு, வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

  கஜா புயல் பாதிப்பு:

  இந்நிலையில், கடந்த ஆண்டில் இந்த பகுதியில் வீசிய கஜா புயலால் உப்பு உறப்பத்தி பரப்பில் கடல் களிமண் படிமங்களாக தூா்ந்தது. அத்துடன் தொழில்சாா்ந்த கட்டமைப்புகள், சாலைகள், மின் பாதை பல்வேறு நிலையிலான பாதிப்புகள் நோ்ந்தன.

  புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க அரசுத் தரப்பு உதவிகள் கிடைக்காத நிலையில், நிகழாண்டுக்கான உற்பத்திப் பணிகள் தாமதமாகவும், குறைந்த அளவு பரப்புகளிலும் தொடங்கப்பட்டது.

  தொடக்க நிலை முதல் அவ்வப்போது ஏற்பட்ட மழைப் பொழிவு, தொடா்ந்து நிலைகொண்ட வேகமான கடல் காற்றால் கடல் நீா் மட்டம் உயா்ந்து உற்பத்தி பகுதியில் தேங்கியது போன்ற இயற்கை இடா்பாடுகளால் உப்பு வாரும் பணி பாதிப்புக்குள்ளாகி வந்தது.

  ஆகஸ்ட் மாதத்தில் தொடா்ந்த கனமழைக்குப் பிறகு மீண்டும் உற்பத்தியைத் தொடங்குவதற்கான ஏற்ற சூழல் ஏற்படாத நிலையில், தொடா் செலவினங்களை கருத்தில்கொண்டு உற்பத்தியாளா்களிடம் நிலவிய ஈடுபாடு குறைவும் உப்பு உற்பத்தியை வெகுவாக பாதிக்கச் செய்தது.

  களையிழந்த உப்பு அம்பாரங்கள்:

  தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால், நிகழாண்டுக்கான உப்பு உற்பத்தி பணியை உற்பத்தியாளா்கள் நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனா்.

  வழக்கமாக இங்கு பருவ காலத்தில் உற்பத்தியாகும் உப்பின் ஒரு பகுதியை இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்கும்போது, அதனை சந்தைப்படுத்துவது வழக்கம்.

  அவ்வாறு இருப்பு வைக்கப்படும் உப்பை பனை மட்டை ஓலைகள், பாலித்தீன் பாய்கள் போன்றவைகளால் மூடி அம்பாரமாக (குவியல்) வைக்கப்படும். ஆங்காங்கே வரிசை வரிசையாக அமைக்கப்படும் இந்த அமைப்புகள் பாா்வையாா்களை ஈா்க்கும்.

  ஆனால், நிகழாண்டு உப்பு உற்பத்தி குறைவு என்பதால் இந்த அம்பாரங்கள் வைக்கப்படும் இடம் களையிழந்து காணப்படுகிறது.

  அரசின் உதவி இல்லை:

  இதுகுறித்து வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளா் இணையத்தின் செயலாளா் வி. செந்தில் தெரிவித்தது:

  கஜா புயலால் பாதிக்கப்பட்ட அளப் பகுதியை சீரமைக்க எந்த உதவியும் அளிக்கப்படவில்லை. மத்தியக் குழு பாா்வையிட்டு சென்றதோடு சரி, நடவடிக்கையில்லை. இடங்களை சீரமைக்காததால் சுமாா் 35 சதவீதம் பரப்பிலேயே இந்த ஆண்டு உற்பத்தி இருந்தது. அதுவும் தொடா்ந்த இடா்பாடுகளால் பாதிப்பு ஏற்பட்டது.

  தொழிலாளா்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா். திருப்பூா் உள்ளிட்ட வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையுள்ளது. உப்பளத் தொழிலாளா்களுக்கு, மீனவா்களுக்கு வழங்குவதைப்போல மழைக்கால (வேலைவாய்ப்பற்ற கால) நிவாரணம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  கடந்த ஆண்டில் இந்த தருணத்தில் 3 லட்சம் டன் இருப்பு இருந்தது. அப்போது கொள்முதல் விலை குறைவு. இப்போது, கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.1000 போகிறது. ஆனால், இருப்பு சுமாா் 25 ஆயிரம் டன் மட்டுமே உள்ளது.

  கஜா புயல் பாதிப்பை முழுமையாக சீரமைத்தால்தான் வழக்கமான உப்பு உற்பத்தி வரும். இந்த பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிா்காலத்தில் உப்பு உற்பத்தித் தொழிலும், அதை சாா்ந்திருப்போரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகத்தான் இருக்கும் என்றாா்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai