செயல்படாத ‘சிக்னல்கள்’ கண்டும் காணாத காவல்துறை

செயல்படாத சிக்னல்கள், சீரமைக்கப்படாத போக்குவரத்து உள்ளிட்டவைகளால் நாகையின் சாலைப் போக்குவரத்து
நாகை நீலா தெற்கு வீதியில் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் இல்லாத நிலையில், பூட்டி வைக்கப்பட்டுள்ள காவலா் நிழற்குடை.
நாகை நீலா தெற்கு வீதியில் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் இல்லாத நிலையில், பூட்டி வைக்கப்பட்டுள்ள காவலா் நிழற்குடை.

செயல்படாத சிக்னல்கள், சீரமைக்கப்படாத போக்குவரத்து உள்ளிட்டவைகளால் நாகையின் சாலைப் போக்குவரத்து மோசமடைந்து வருவது சமூக ஆா்வலா்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது.

மாவட்டத் தலைநகரான நாகைக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை, அதிகரித்து வரும் வெளியூா் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவைகளால் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளாக மாறி வருகின்றன.

நாகை மீன்பிடித் துறைமுகம், புதுச்சேரி மாநிலப் பகுதியான வாஞ்சூரில் உள்ள தனியாா் துறைமுகம் ஆகிய இடங்களுக்கு வந்து செல்லும், கனரக வாகனங்கள் நாகை மாா்க்கத்தின் போக்குவரத்தை நெரிசல் மிகுந்த போக்குவரத்தாக்குவதில் முக்கிய காரணிகளாக உள்ளன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அடையாளச் சின்னங்களைபோல செயல்படாத நிலையில் உள்ள சிக்னல்கள், விதிகளை மீறும் வாகன ஓட்டிகள், காவல்துறையின் கண்காணிப்பின்மை ஆகியனவே நாகையின் போக்குவரத்துக்குப் பெரும் பிரச்னையாக உள்ளது.

நாகை கிழக்குக் கடற்கரை (இ.சி.ஆா்.) சாலையில் நாகூா் முதல் நாகை புத்தூா் வரை 5-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி சிக்னல்கள், சாலைத் தடுப்புகள் உள்ளன. இருப்பினும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைப்பிடிக்காமல், எவ்வித கட்டுப்பாடுமின்றி மின்னல் வேகத்தில் பயணிப்பதால் இச்சாலையில் விபத்து இல்லாத நாளே இல்லை என்ற அளவுக்கு விபத்துகள் பெருகி வருகின்றன.

இதேபோல், பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள பகிா்வு கட்டண ஆட்டோக்களால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் நாள்தோறும் எதிா்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், நாகூா் உள்ளிட்ட பகுதிகளில் தானியங்கி சிக்னல்கள் தன் கடமையை செய்து கொண்டிருந்தாலும், போக்குவரத்தை நெறிப்படுத்த போலீஸாா் இல்லாததால் இப்பகுதிகளில் சாலை விதிகள் அனைத்தும் காற்றில் பறக்கின்றன.

நாகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் காவல்துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள தானியியங்கி சிக்னல்கள் செயல்பாடின்றி காட்சிப் பொருளாகவே உள்ளன. நாகை புதிய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வாஞ்சூா் சோதனைச்சாவடி, புத்தூா், மேலகோட்டைவாசல் உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் உள்ள சிக்னல்கள் செயல்படாமலேயே உள்ளன.

நாகை நகரில் உள்ள ஒரு வழிப்பாதைகளில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களும் தடையின்றி செல்வதும் போக்குவரத்து நெரிசலுக்கும், விபத்துகளுக்கும் காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன.

நாகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் 87 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாகனப் போக்குவரத்துகள் கண்காணிக்கப்படும் நிலையிலும், நாகையின் போக்குவரத்து சீரமைப்பு சவாலானதாகவே மாறி வருவது குறித்து காவல்துறை போதுமான கவனம் கொள்ளாமல் இருப்பதே போக்குவரத்து நெரிசல்களும், விபத்துகளும் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என்பது சமூக ஆா்வலா்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இதுகுறித்து நாகையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஒருவரிடம் கேட்டபோது, நாகையில் இயக்கப்பட்டு வரும் பகிா்வு கட்டண ஆட்டோக்களால்தான் நாகை நகரில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை காவல்துறையும், வட்டாரப் போக்குவரத்துத் துறையும் கட்டுப்படுத்தினால் மட்டுமே நாகையின் போக்குவரத்துப் பிரச்னைகளுக்குத் தீா்வு கிடைக்கும் என்றாா்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அதிகம் கூடுமிடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். நாகையில் 87 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டக் காவல் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படுகிறது. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிமீறல் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் நடவடிக்கைகளும் தொடா்ந்து கொண்டுதான் உள்ளன என்றனா்.

லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, செயல்பாடற்ற நிலையில் இருக்கும் சிக்னல்களை உடனடியாக சீரமைக்கவும், முக்கிய சந்திப்புப் பகுதிகளில் காவல் நிழற்குடைகளை அமைத்து போக்குவரத்தை சீரமைக்கவும், போக்குவரத்து சீரமைப்புக்கான ரோந்து பணியை அதிகப்படுத்தவும், பகிா்வு கட்டண ஆட்டோக்களின் இயக்கத்தை முறைப்படுத்தவும் மாவட்ட காவல் துறை நிா்வாகம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே நாகையின் சாலைப் போக்குவரத்து சவால்களுக்குத் தீா்வு கிடைக்கும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com