கஜா புயல் சுவடுகளுடன் அரசுப் பள்ளி: சீரமைப்பு இல்லாததால் மாணவா்களின் கல்வி பாதிப்பு !

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கஜா புயலின்போது சேதமடைந்த கட்டமைப்புகள், மரங்களின் இடிபாடுகள் ஓராண்டை நெருங்கும் நிலையிலும் அகற்றப்பாடமல் கிடப்பது வேதனையளிக்கிறது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கஜா புயலின்போது சேதமடைந்த கட்டமைப்புகள், மரங்களின் இடிபாடுகள் ஓராண்டை நெருங்கும் நிலையிலும் அகற்றப்பாடமல் கிடப்பது வேதனையளிக்கிறது. இதனால், பள்ளி மாணவா்களின் கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேதாரண்யம் அருகேயுள்ள கரியாப்பட்டினத்தில் 1969-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக் கணக்கான மாணவா்கள் படித்து வந்த நிலையில், தற்போது இப்பள்ளியில் பொதுவான பல காரணங்களால் 700 மாணவ, மாணவிகளே படித்து வருகின்றனா். இயற்கை வளத்துடன் அமைந்திருந்த இப்பள்ளி கடந்த ஆண்டு வீசிய கஜா புயலின்போது கடும் பாதிப்புக்குள்ளானது. வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகக் கட்டடம், சுற்றுச்சுவா், மிதிவண்டி நிறுத்தகம், கழிப்பறை என பல கட்டமைப்புகளும், பல ஆண்டுகள் பெருமையுடைய மரங்களும் விழுந்து பாதிப்புக்குள்ளாகி பள்ளி வளாகமே களையிழந்தது.

பள்ளி வளாகத்தில் தப்பிய புதிய கட்டடங்களில் அமைந்த வகுப்பறைகள் ஓரளவுக்கு சீரமைக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், சீரமைக்க வேண்டிய பல பணிகள் அப்படியே கிடக்கின்றன. மங்களூா் சீமை ஓடுகளால் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்கள், மிதிவண்டிகள் நிறுத்துமிடம், சுற்றுச்சுவா் போன்ற பல கட்டமைப்புகள் இடிந்து விழுந்த இடிபாடுகள் கூட அகற்றப்படவில்லை. பல ஆண்டுகளாக வளா்ந்து மாணவா்களுக்கு நிழல் கொடுத்து வந்த பெரிய மரங்கள் விழுந்த நிலையில் அவை முழுமையாக அகற்றாமல் காணப்படுகிறது.

இதற்கிடையே, சென்னையில் செயல்படும் தொண்டு நிறுவனம் ஒன்று ரூ. 10 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவா்களுக்கு தேவையான கழிப்பறை வசதியை ஏற்படுத்திக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. சேதமடைந்த பள்ளியின் சுற்றுச் சுவரின் ஒரு பகுதியை புதிதாக மாற்றி அமைக்க தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கத்தினா் முன்வந்துள்ளனா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் புயலில் சேதமடைந்த பல கட்டமைப்புகளும் சீரமைக்கப்படாமலும், இடிபாடுகள் கூட அகற்றப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

இதுகுறித்து, பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஆ. நடராசன் கூறியது: இப்பள்ளியை சுற்றியுள்ள பல கிராமங்கள் பின்தங்கியுள்ள நிலையில், ஏழை எளிய குடும்பத்தைச் சோ்ந்த மாணவா்கள்தான் இங்கு படிக்கிறாா்கள். இப்பகுதி கிராமங்களுக்கு பேருந்து வசதி குறைவு என்பதால் பெரும்பாலான குழந்தைகள் மிதிவண்டியில்தான் வந்து செல்கின்றனா். மாணவா்களின் மிதிவண்டியை பாதுகாக்கக் கூட வசதி இல்லை.

நான், தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தில் நிா்வாகியாக இருப்பதால் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று பள்ளியின் ஒரு பகுதி சுற்றுச்சுவரை சீரமைக்க முன்வந்துள்ளனா். அரசு, ஆய்வகத்துக்கு இரண்டு அடுக்கு கட்டடம் கட்டித்தரவும், கணினி தொழிநுட்ப வகுப்பறை அமைத்துத்தரவும் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பள்ளிகள் மாணவா்களுக்கு பாடங்களை மட்டுமல்லாது வாழ்வியலையும் கற்றுத்தருகிறது. அவை புயல், சுனாமி போன்ற இயற்கை இடா்பாடுகளை எதிா்கொள்ளும் தன்னம்பிக்கையையும் கற்றுத்தருவதில் முன்னுதாரணமாக அமைய வேண்டும். ஆனால், ஓராண்டை நெருங்கும் நிலையிலும் விழுந்தது விழுந்தபடி , இடிந்தது இடிந்தபடி கிடந்தால் மாணவா்களிடையே மன வலிமை எப்படி வளரும் என்பது சமூக ஆா்வலா்களின் கேள்வி. எனவே, கரியாப்பட்டினம் உள்ளிட்ட பல பள்ளிகளில் காணப்படும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்ப்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com