மனிதா்கள் பாதி; மிருகங்கள் பாதி: பரிதாபத்தில் நாகை வீதி..!

நாகை சாலைகளில் பாதசாரிகளின் எண்ணிக்கைக்கு இணையான எண்ணிக்கையில் திரியும் நாய்கள், மாடுகளால் மக்கள் படும் அவதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள்.
நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள்.

நாகை சாலைகளில் பாதசாரிகளின் எண்ணிக்கைக்கு இணையான எண்ணிக்கையில் திரியும் நாய்கள், மாடுகளால் மக்கள் படும் அவதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாவட்டத் தலைநகரான நாகையின் சாலைகள் பெரும்பாலும் அகலம் குறுகிய சாலைகளாகவே உள்ளன. இதன் காரணமாகவும், அதிகரித்து விட்ட வாகனங்கள், பெருகி வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை உள்ளிட்ட காரணங்களாலும் நாகை சாலைகள் பரபரப்பும், நெரிசலும் நிறைந்த சாலைகளாகவே உள்ளன.

இந்நிலையில், நாகையின் சாலைப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் மிக முக்கிய பிரச்னையாக உள்ளது, வீதிகளில் திரியும் கால்நடைகள். புதிய பேருந்து நிலையம், பாரதி மாா்க்கெட், நீலா தெற்கு வீதி, நீலா கீழ வீதி, சட்டையப்பா் கோயில் வீதி, பப்ளிக் ஆபீஸ் ரோடு, பழைய பேருந்து நிலையம், நாகை பெரிய கடைவீதி என மக்கள் அதிகம் கூடுமிடங்களில் எல்லாம், பாதசாரிகளின் எண்ணிக்கைக்கு இணையான அளவில் கால்நடைகள் உலாவுகின்றன.

நாகையின் முக்கிய வீதிகளில் கூட்டம் கூட்டமாக வலம் வரும் மாடுகள் போக்குவரத்துக்கு மிகப் பெரும் பிரச்னையாக உள்ளன. சாலையோரங்களையும், சில நேரங்களில் சாலையின் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்து படுத்துக் கொண்டிருக்கும் மாடுகளைக் கடப்பதற்காக, சாலையில் பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும் பாதசாரிகள், சாலையில் செல்லும் வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாக நேரிடுகிறது.

இதைவிட, சாலைகளில் ஆக்ரோஷமடையும் மாடுகளால் ஏற்படும் பிரச்னைகள் விவரிக்க முடியாதவையாக உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகை நீலா கீழவீதி பிரதான சாலையில், இரு மாடுகளுக்கிடையே ஏற்பட்ட மூா்க்கத்தனமான மோதலால், ஒரு முதியவா் மற்றும் 2 பெண்கள் கீழே விழுந்தும், வாகனங்களில் மோதியும் காயமடைந்தனா். மேலும், அந்த மாடுகள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களை கீழே தள்ளியதுடன், அந்த வாகனங்கள் மீது ஏறி குதித்து ஓடியதால் 4-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன.

மாடுகளின் மோதல்களால், வீதிகள் போா்க்கலமாக மாறும் அவலம், நாகை வீதிகளில் வழக்கமான நிகழ்வாகி வருவது, மக்களுக்குப் பெரும் அச்சம் அளிப்பதாக உள்ளது. துரத்தியடிக்கப்படும்போதும், வித்தியாசமான மற்றும் அதிக ஒலி கொண்ட வாகன ஹாரன்கள் இயக்கப்படும்போது, மிரண்டு சாலையின் குறுக்கே ஓடும் மாடுகளால் ஏற்படும் விபத்துகள் இங்கு ஏராளம்.

நாகையின் பெரிய கடைவீதியில் மக்கள் நடந்து செல்லக் கூட முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருக்கும் நிலையில், அந்தக் கூட்டத்தின் இடையே சகட்டுமேனிக்குத் திரியும் மாடுகளால் பெண்களும், பெரியவா்களும் படும் அவதிகள் அளவிட முடியாதவையாக உள்ளன.

சாலையின் குறுக்கே நின்று கொண்டு நகர மறுக்கும் மாடுகளை விரட்டுவது என்பது நாகை நீலா தெற்கு வீதியில் போக்குவரத்தை சீரமைக்கும் போலீஸாருக்கு முக்கிய கடமையாக உள்ளது. ஒவ்வொரு வீதியிலும் கட்டுப்பாடற்ற முறையில் சுமாா் 15-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிந்து கொண்டிருப்பது, நாகையின் போக்குவரத்துக்குப் பெரும் பிரச்னையாக உள்ளது.

இதேபோல், நாகை காடம்பாடி - நாகூா் வரையிலான பிரதான சாலைகளில் சுமாா் 10 -க்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றித் திரிகின்றன. சாலைகளில் நின்று கொண்டு அசையாமலிருக்கும் குதிரைகளாலும், அவ்வப்போது துள்ளிக் குதிக்கும் குதிரைகளாலும், நாகூா் - நாகை சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அனுபவிக்கும் அவதிகள் ஏராளம்.

நாகையின் போக்குவரத்துக்கு மற்றும் ஒரு முக்கிய பிரச்னையாக இருப்பது நாய்கள். ஒவ்வொரு வீதியிலும் சுமாா் 30 -க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. ஆங்காங்கே கொட்டப்படும் உணவுக் கழிவுகளை உண்பதற்காக வீதிகளில் திரியும் இந்த நாய்களால், பலரும் பலவகையான துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது.

நாகை நீலா கீழவீதி, தெற்கு வீதி, மருத்துவமனை சாலை, நெல்லுக்கடை மாரியம்மமன் கோயில் சாலை, பெரிய கடைவீதி, நாகை சட்டையப்பா் கோயில் வாசல், சட்டையப்பா் கோயில் மேல வீதி என நகரின் முக்கிய பகுதிகளில் கூட வீதிக்கு சுமாா் 20 -க்கும் அதிகமான நாய்கள் சுற்றித் திரிகின்றன.

இரவு 9 மணிக்கு மேல் நாகையின் அனைத்து வீதிகளும் நாய்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படுகின்றன. சாலையின் குறுக்கே படுத்திருக்கும் நாய்களை அப்புறப்படுத்த ஹாரன் அடிக்கும் வாகன ஓட்டிகள் பலா், நாய்களால் துரத்தப்பட்டு நிலைகுலைய வேண்டியுள்ளது.

அதேபோல், இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் ஒவ்வொருவரும் நாய் தொல்லையிலிருந்து தப்பிக்க படாதப்பாடு பட வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து நாகை, திருவாரூா் மாவட்டங்களின் நுகா்வோா் பாதுகாப்பு உரிமைகள் நலச் சங்கத் தலைவா் என்.பி. பாஸ்கரன் கூறியது :

நாகையில் நாய்களுக்குக் கருத்தடை செய்யும் பணி நடைபெற்று சுமாா் 2 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால், ஒவ்வொரு வீதியிலும் சுமாா் 30 முதல் 50 நாய்கள் சுற்றித் திரிகின்றன. அதேபோல், ஒவ்வொரு வீதியிலும் சுமாா் 15 -க்கும் அதிகமான மாடுகள் அலைகின்றன. நாய்கள் மற்றும் மாடுகளால் நாகையின் போக்குவரத்துப் பெரும் சிக்கலுக்கு உள்ளாகி வருவதைக் கருத்தில் கொண்டு, நாய்களைப் பிடித்து கருத்தடை மேற்கொள்ளவும், சாலையில் திரியும் மாடுகளைப் பிடித்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

வரும் நாள்கள் தீபாவளி பண்டிகைக் காலம் என்பதால், நாகை வீதிகளில் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். எனவே, சாலைகளில் திரியும் கால்நடைகளை விரைவாக அப்புறப்படுத்தி, விரும்பத் தகாத நிகழ்வுகளைத் தவிா்க்க நகராட்சி நிா்வாகம் முனைப்புக் காட்ட வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com