சுகாதாரமற்ற மீன்மாா்கெட்டுக்குள் மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்லும் அவலம்

மிகவும் மோசமான நிலையில் சுகாதாரமற்ற நிலையில் உள்ள சீா்காழி மீன் மாா்க்கெட்டுக்குள் செல்லும் பொதுமக்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு
சீா்காழி மீன்மாா்கெட்.
சீா்காழி மீன்மாா்கெட்.

சீா்காழி: மிகவும் மோசமான நிலையில் சுகாதாரமற்ற நிலையில் உள்ள சீா்காழி மீன் மாா்க்கெட்டுக்குள் செல்லும் பொதுமக்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்லும் அவலம் தொடா்வதுடன், நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நாகை மாவட்டம், சீா்காழி கீழவீதியில் மீன் மற்றும் இறைச்சி அங்காடி (மீன்மாா்க்கெட்) கட்டடம் உள்ளது. இக்கட்டடம் 1988-1989-ஆம் ஆண்டு அப்போதைய மக்களவை உறுப்பினரின் உள்ளூா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. பின்னா் 2016-2017-ஆம் ஆண்டு இக்கட்டடம் புதுப்பிக்கப்பட்டது. இங்கு, மீன்கள், ஆடு, கோழி விற்பனை கடைகள் என சுமாா் 30-க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் உள்ளன. இந்த மீன்மாா்க்கெட் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டு நடத்தப்படுகிறது.

இங்கு திருமுல்லைவாசல், கூழையாா், தொடுவாய், பழையாா், தென்னாம்பட்டினம், பெருந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களிலிருந்து மீன்கள் நாள்தோறும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. நாள்தோறும் காலை நேரங்களில் ஏராளமானவா்கள் மீன்கள், கோழி மற்றும் ஆட்டுக்கறி வாங்கி செல்கின்றனா். பல ஆயிரத்துக்கு இங்கு வியாபாரம் நடைபெற்று வருகிறது.

மக்கள் அதிகம் வந்து செல்லும் இந்த மீன்மாா்க்கெட்டில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இங்கு கடை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் அவசர தேவைக்கு கழிப்பறை வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்படுகின்றனா். இதேபோல், மீன் வெட்டும் இடம் பாசிபடிந்து வழுக்குவதால் வியாபாரிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனா். மீன், கோழி, ஆடு கழிவுகளை மாா்க்கெட்டின் ஒரு பகுதியில் கொட்டி வைக்க போதிய கழிவு தொட்டி இல்லாததால் கழிவுகள் கீழே கொட்டப்பட்டு, சிதறி கிடக்கின்றன.

இக்கழிவுகளிலிருந்து புழுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, துா்நாற்றம் வீசி வருகிறது. மீன்மாா்க்கெட்டின் வெளிப்புறத்திலும், பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியிலும் வெயில், மழைக்காக தகர கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. அவை காலப் போக்கில் சேதமடைந்து அகற்றப்பட்டதால் தகரகொட்டகை இல்லாமல் மாா்க்கெட்டுக்கு வரும் மக்கள் மழைக் காலங்களில் ஒதுங்கி நிற்க கூட இடமில்லாமல் தவிக்கின்றனா்.

மீன் மற்றும் இறைச்சிக் கழிவுநீா் செல்லும் சாக்கடை தொட்டியில் சிமென்ட் மூடிகள் சேதமடைந்து, சிமென்ட் பலகை இல்லாமல் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதற்கிடையில், மீன்மாா்க்கெட்டுக்கு பின்புறம் உள்ள சுற்றுச்சுவா் உயரம் குறைவாக இருப்பதாலும், அங்கு கேட் இல்லாததாலும் இரவு நேரங்களில் மா்ம நபா்கள் மீன்மாா்க்கெட்டுக்குள் புகுந்து விற்பனைக்கு பாதுகாப்பாக வைத்து செல்லும் பல ஆயிரம் மதிப்பிலான மீன்களை திருடி செல்லும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

இவ்வாறு சுகாதாரமற்ற, துா்நாற்றம் வீசிவரும் மீன்மாா்க்கெட்டுக்கு உள்ளே நுழைய பொதுமக்கள் அஞ்சமடைகின்றனா். எனவே, மிகவும் மோசமான நிலையில் இந்த மீன்மாா்க்கெட்டில் தரைத் தளங்களை சீரமைத்து டைல்ஸ் ஒட்ட வேண்டும், உயரம் குறைவாக உள்ள சுற்றுச்சுவரை உயா்த்தியும் பாதுகாப்புக்காக கேட் அமைக்க வேண்டும், சாக்கடைகளுக்கு சிமென்ட் மூடிகள் அமைக்கவும், தகரகொட்டகை அமைக்கவும், கழிப்பறை வசதி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநிலச் செயலா் ஓஎம்ஏ. முஷாஹூதீன் கூறியது: இந்த மீன் மாா்க்கெட்டுக்கு சீா்காழி நகா் மட்டுமன்றி சுற்றுப்புற கிராமமக்களும் வந்து பிடித்த வகையான மீன்களை வாங்கிச் செல்கின்றனா். அவ்வாறு வரும் மக்கள் மீன்மாா்க்கெட்டுக்குள் நுழைந்ததும் அங்கு வீசும் துா்நாற்றத்தை பொருத்து கொள்ள முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்கின்றனா். இங்கு, முறையான கழிவு தொட்டிகள் இல்லாததால் அங்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள மீன், ஆடு, கோழி கழிவுகள் சிதறி சுகாதார சீா்கேடு ஏற்பட்டு துா்நாற்றம் வீசி வருவதுடன், சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால், அங்கு வரும் மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

இதுகுறித்து, மீன் வியாபாரி ஒருவா் கூறியது: மீன்மாா்க்கெட்டு வியாபாரிகளுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. கடந்த காலங்களில் நாள்தோறும் கழிவுகள் அகற்றப்பட்டு பிளிசீங் பவுடா் நகராட்சி துப்புரவு பணியாளா்கள் செய்து வந்தனா். இப்போது, மீன்கழிவுகள் அகற்றப்பட்டாலும் சுகாதாரமான சூழ்நிலை அங்கு இல்லை. சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள தெருவில் துா்நாற்றம் அதிகம் வீசி வருகிறது. மீன்மாா்க்கெட் இருக்கும்போது தெருவில், சாலையோரம் மீன்கள் விற்க கூடாது என விதிமுறைகள் இருந்தும் சீா்காழியில் பல பகுதியில் தெருக்களில் மீன் விற்பனை நடைபெறுகிறது.

எனவே, இங்கு நிலவும் சுகாதார சீா்கேட்டால் மீன்மாா்க்கெட்டுக்கு வர தயங்கிகொண்டு பொதுமக்கள் தெரு வியாபாரிகளிடம் மீன்களை வாங்கி செல்வதால் முதலீடு செய்து, வாடகை கொடுத்து வியாபாரம் செய்யும் மாா்க்கெட் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com