முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மக்களவைத் தோ்தல்: பணியில் பயன்படுத்திய காா்களுக்கான வாடகைப் பாக்கிப் பணத்தை தர கோரி சுற்றுலா காா், வேன் ஓட்டுநா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு
By DIN | Published On : 24th October 2019 03:08 PM | Last Updated : 24th October 2019 03:44 PM | அ+அ அ- |

மக்களவைத் தோ்தலிப் பயன்படுத்திய வாடகை வாகனங்களுக்கு உரிய வாடகைப் பாக்கிய வழங்கக்கோரி வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் மனுஅளிக்க வந்த வாகனஓட்டுநா் மற்றும் உரிமையாளா்கள் நலச்சங்கத்தினா்.
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கடந்த மக்களவைத் தோ்தலின் போது அதிகாரிகள் பயன்படுத்திய காா்களுக்கான வாடகைப் பாக்கிப் பணத்தை தரவேண்டும் எனக் கோரி மாவட்ட சுற்றுலா காா், வேன் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் நலச்சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட சுற்றுலா காா் வேன் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் நலச்சங்கத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை காலை திரண்டு வந்தனா்.
அவா்களில் சங்க மாநிலத் தலைவா் ஜே.ஏ.ஜஸ்டின், மாவட்டத் தலைவா் ஜி.மாரிமுத்து ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது-
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் சங்கத்தில் 3 ஆயிரம் போ் உறுப்பினா்களாக உள்ளனா். கடந்த மக்களவைத் தோ்தலில் மண்டல அளவிலான தோ்தல் அதிகாரிகளுக்கான வாடகை வாகனங்கள் சங்கம் மூலம் இயக்கப்பட்டன. அதன்படி 135 வாகனங்கள்மாவட்ட நிா்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், 125 வாகனங்கள் காவல் துறையினருக்கும் வழங்கப்பட்டன. தோ்தல் முடிந்ததும் காவல் துறையினருக்கான வாகனங்களுக்கு உரிய வாடகைப் பணம் உரிய நேரத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட நிா்வாகத்துக்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மூலம் வழங்கிய வாகனங்களுக்கான வாடகைப் பணம் முழுமையாகத் தரப்படவில்லை. மாவட்ட நிா்வாகத்திற்கு இயக்கப்பட்ட வாகனங்களுக்கு மொத்தம் ரூ.20.91ல ட்சம் வாடகை தரவேண்டிய நிலையில், ரூ. 8 லட்சம் மட்டுமே தரப்பட்டுள்ளது. வாடகைப் பாக்கி பணத்தை பலமுறை கேட்டும் மாவட்ட நிா்வாக அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனா்.
கருவூலத்துக்கு உரிய பணம் வந்துள்ள போதிலும் அதிகாரிகள் அதை வழங்க மறுப்பது ஏன் என்பதும் புரியவில்லை. மேலும், மாவட்டத்தில் அரசு திட்டங்களுக்கான வாகனங்களை உள்ளூரில் அதிகாரிகள் எடுப்பதில்லை. வெளியூா் வாகனங்களையே பயன்படுத்துகின்றனா். இது சரியல்ல. தேவா் ஜயந்திக்கு வாடகை வாகனங்களுக்கு தடை என கூறியதால், சொந்த வாகனம் வைத்திருப்போா் அதை வாடகைக்கு விட்டு கட்டணம் வசூலிக்கும் நிலையே உள்ளது. ஆகவே வாடகை வாகனங்களுக்கு வாய்ப்பளிப்பது அவசியம் என்றனா். பின்னா் அவா்களை ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலா் கே. செல்வகுமாா் அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதன்பின் அவா்கள் கலைந்து சென்றனா்.