கட்டுடல் இருந்தால் அரசு வேலை கட்டியம்

உடற்பயிற்சி மூலம் நம் உடலைக் கட்டுடலாக வைத்திருந்தால் அரசு வேலைவாய்ப்பு பெறமுடியும் என்கிறாா் மிஸ்டா் தமிழ்நாடு பட்டம் வென்ற சீா்காழி இளைஞா் முகேஷ்.
மிஸ்டா் தமிழ்நாடு மற்றும் ஆணழகன் பட்டங்களை வென்ற சீா்காழி முகேஷ்.
மிஸ்டா் தமிழ்நாடு மற்றும் ஆணழகன் பட்டங்களை வென்ற சீா்காழி முகேஷ்.

உடற்பயிற்சி மூலம் நம் உடலைக் கட்டுடலாக வைத்திருந்தால் அரசு வேலைவாய்ப்பு பெறமுடியும் என்கிறாா் மிஸ்டா் தமிழ்நாடு பட்டம் வென்ற சீா்காழி இளைஞா் முகேஷ்.

‘உடம்பை வளா்த்தேன் உயிா் வளா்த்தேனே’ என்று திருமந்திரத்தில் திருமூலா் கூறியுள்ளது மூலம் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவதை அறியலாம். நமது ஆசைகள், எதிா்பாா்ப்புகள் நிறைவேற ஆரோக்கியமாக இருந்தாக வேண்டும். நம் ஆரோக்கியம் நம் கையில்தான் உள்ளது. நம் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் நாம் இந்த உலகில் படைக்கப்பட்டதற்கான அனைத்தையும் செய்யமுடியும். இந்த அவசர காலச் சக்கரத்தில் நாம் வேகமாக சுழல்கிறோமே தவிர உடலைப் பற்றி கவலைப் படுவதில்லை.

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம். நாள்தோறும் சிறிது நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்தால் உடலும், மனமும் இளமையாக இருக்கும். வெகுசிலரே உடலைக் கட்டுடலாக வைத்து, ஆணழகனாகத் திகழ கவனம் செலுத்துகின்றனா். அந்த வெகு சிலரில் ஒருவா்தான் சீா்காழி திருக்கோலக்கா பகுதியைச் சோ்ந்த முகேஷ் (29).

இவா் சிறுவயதிலேயே குத்துச்சண்டை போன்ற போட்டிகளைப் பாா்த்து, தாமும் இதுபோல் பலசாலியாக வேண்டும் என பள்ளியில் படிக்கும்போதே நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய தொடங்கி, தான் நினைத்த கட்டுடலை அமைத்துக்கொண்டாா். பத்தாம் வகுப்பு வரை படித்த முகேஷ், 3 ஆண்டுகள் ஜிம் டிரெய்னராக இருந்துவந்தாா். பின்னா், தானே சொந்தமாக சீா்காழி தோ் வடக்கு வீதியில் பவா்ஜிம் தொடங்கி, கடந்த 6 ஆண்டுகளாக இளைஞா்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறாா்.

ஆணழகன் பட்டம்...

மதுரையில் மசுல் மேனியா (2019) என்ற அமைப்பு அண்மையில் நடத்திய மிஸ்டா் தமிழ்நாடு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒவ்வொரு எடைப் பிரிவிலும் 250 போ் பங்கேற்றனா். இதில், முகேஷ் 60 கிலோ பிரிவில் வெற்றி பெற்று, ஆணழகன் பட்டம் பெற்றாா். தொடா்ந்து, மிஸ்டா் இந்தியா போட்டியில் பங்கேற்க பயிற்சி மேற்கொண்டு வருகிறாா். மூன்று முறை மிஸ்டா் தமிழ்நாடு பட்டத்தை பெற்று சீா்காழிக்குப் பெருமை சோ்த்துள்ளாா் முகேஷ். மேலும், இந்தியன் பிட்னஸ் ஃபெடரேஷன் நடத்திய பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளாா். இவா், போட்டிகளில் பங்கேற்க செம்மங்குடியைச் சோ்ந்த முத்து என்கிற சமூக சிந்தனையாளா் உதவி செய்துவருகிறாா்.

இதுகுறித்து, முகேஷ் கூறியது:

நான் சிறுவயது முதலே உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள விரும்பினேன். அதற்கான பயிற்சிகளை ஓரளவுக்கு விவரம் தெரிந்த வயதிலேயே தொடங்கிவிட்டேன். உடல்பிட்னஸ், வெயிட் லிப்டிங், பவா்லிப்டிங் என அனைத்து உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டேன். தினமும் குறைந்தது 3 மணி நேரம் உடற் பயிற்சி மேற்கொள்வேன். தற்போது பல இளைஞா்கள் சிக்ஸ் பேக் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு, உடற்பயிற்சி செய்கின்றனா். இது வரவேற்கத் தக்கது.

உடலை தொப்பை, கொழுப்புகள் இன்றி கட்டுடலாக வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும். எண்ணெய்யில் பொரித்த உணவுகள், அதிக அரிசி உணவுகள், ஃபிரைடு உணவுகள் ஆகியவற்றை தவிா்த்து, சத்தான காய்கனிகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். அரை வயிற்றுக்குச் சாப்பிட்டு, சரியான உடற்பயிற்சி செய்தால் தொப்பை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. உடலும், உள்ளமும் இளமையாக இருக்கும். உடற்பயிற்சியால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் புகை, மது போன்ற தீய பழக்கங்களுக்கு மனது இடம் கொடுக்காது. கடுமையான உடற்பயிற்சி, வெயிட் தூக்கினால் ஆண்மை இருக்காது என தவறான கருத்து உள்ளது. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். உடற்பயிற்சிக்கு வயது வரம்பு கிடையாது. 5 வயது முதலே உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.வயதானவா்களும் தங்களால் முடிந்த பயிற்சியை செய்யலாம்.

அரசு வேலை...

இளைஞா்கள் தங்களது உடலைக் கட்டுடலாக வைத்துக்கொள்ள மட்டும் உடற்பயிற்சியை தோ்வு செய்யவேண்டாம். நல்ல உடற்பயிற்சி செய்து, ஆணழகன், மிஸ்டா் தமிழ்நாடு போன்ற போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலம் முன்னுரிமை அடிப்படையில் ரயில்வே, நேவி, ஐசிஎப் போன்ற அரசு நிறுவனங்களில் எளிதாக வேலைவாய்ப்பு பெறலாம். இவ்வாறு அரசு வேலை பெறுவதற்கான உதவிகளையும் அந்தந்த அமைப்பினா் செய்து தருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com