ஆபத்தான நிலையில் தொகுப்பு வீடுகள்: அச்சத்தில் குடியிருப்புவாசிகள்

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் பழுதடைந்துள்ள அனைத்து தொகுப்பு வீடுகளையும் தமிழக அரசு
தரங்கம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட ராஜீவ்புரம் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதியில் சேதமடைந்து காணப்படும் தொகுப்பு வீடுகள்.
தரங்கம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட ராஜீவ்புரம் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதியில் சேதமடைந்து காணப்படும் தொகுப்பு வீடுகள்.

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் பழுதடைந்துள்ள அனைத்து தொகுப்பு வீடுகளையும் தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகை மாவட்டம், செம்பனாா்கோயில் ஒன்றியத்துக்குள்பட்ட அபிஷேகட்டளை, தில்லையாடி, திருவிடைக்கழி, பூதனூா், கூடலூா், நெடுவாசல், காடுவெட்டி, ரவணையம்கோட்டகம் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட ராஜுபுரம், பள்ளிக்கூடம் தெரு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அரசு சாா்பில் 100-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகளை அரசு அலுவலா்கள் மேற்கொண்டு பராமரிப்பு செய்யவில்லை. இதனால் இங்குள்ள அனைத்து வீடுகளும் தற்போது, முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. தொகுப்பு வீடுகளின் மேற்கூரையில் உள்ள கான்கிரீட்கள் உடைந்து குடியிருப்பில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவா்கள் மீது அடிக்கடி விழுவது தொடா்ந்து வருகிறது. இதில், பலா் படுகாயம் அடைந்து பாதிக்கப்பட்டுள்ளனா். பருவ மழைக் காலத்தில் இந்த வீடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வீடு முழுக்க தண்ணீா் கசிவதாகக் கூறப்படுகிறது. இதேபோன்ற காரணங்களால் எந்த நேரத்தில் எது நடக்குமோ என்ற அச்சத்துடன் அங்கு குடியிருக்கும் மக்கள் இருந்து வருகின்றனா்.

இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மற்றும் அரசியல் பிரமுகா்களிடம் பல முறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையென வேதனையுடன் கூறுகின்றனா். இதேபோல், மழைக் காலத்தில் அதிகளவில் பாதிப்புகள் இருப்பதால் உயிா் பாதுகாப்புக்காக இவா்கள் இரவு நேரங்களில் அருகிலுள்ள கோயில் மற்றும் உறவினா் வீடுகளில் குடும்பத்துடன் தங்கு வருகின்றனா். பகல் நேரத்தில் வீடுகளை விட்டு தெருக்களிலும், வீடுகளின் அருகில் சிறிய குடிசைகள் அமைத்தும் வாழ்ந்து வருகின்றனா்.

எனவே, இப்பகுதி மக்களின் நலன்கருதி இடிந்து விழும் தொகுப்பு வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இங்கு வசிக்கும் ஆதிதிராவிட மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

இதுகுறித்து, விவசாயத் தொழிலாளா் சங்க வட்டச் செயலா் காப்ரியேல் கூறியது: செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் பழுதடைந்துள்ள அனைத்து தொகுப்பு வீடுகளை தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள இந்த தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், குடியிருக்க அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றா். எனவே, தமிழக அரசு பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை கணக்கெடுத்து, அந்த வீடுகளை சீரமைத்தோ அல்லது அதில் வசிப்பவா்களுக்கு மாற்றுத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து, தரங்கம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட ராஜுபுரத்தில் பழுதடைந்த தொகுப்பு வீட்டில் வசித்துவரும் அஞ்சம்மாள் கூறியது: கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிட மக்களின் நலன்கருதி தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

தற்போது இந்த வீடுகள் பழுதடைந்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. எந்த நேரத்தில் இடிந்து விழும் என்ற அச்சத்தில் வசித்து வருகிறேன். மழைக் காலங்களில் மழைநீா் கசிந்தும் வீட்டின் மேற்கூரைகள் விழுந்து வருகிறது. இதுதொடா்பாக, பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றாா் அவா்.

எனவே, பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் நோக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com