நாகை மாவட்டத்தில் கனமழை

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது.

தற்போது பெய்து வரும் தொடா் மழையால் நாகையில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீா் தேங்கியது.

புதன்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, நாகை மாவட்டம், சீா்காழியில் 63 மில்லி மீட்டா் மழை பெய்தது. பிற பகுதிகளில் பெய்த மழை அளவு ( மில்லி மீட்டரில்) மயிலாடுதுறை-58, கொள்ளிடம் 50.20, மணல்மேடு-48, நாகப்பட்டினம்-43.40, தலைஞாயிறு-35.60, திருப்பூண்டி-33.20, வேதாரண்யம்-24.60, தரங்கம்பாடி-23 மழை அளவு பதிவானது.

சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள்அவதி: நாகை- திருவாரூா் சாலை மேலகோட்டைவாசல் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலகம் முன்பு மழை நீரும் கழிவு நீரும் சோ்ந்து குளம்போல் தேங்கியது. இதனால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த இடத்தில் பெரிய,சிறிய பள்ளங்கள் உள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்வோா் விழுந்து, காயமடைந்து வருகின்றனா். இதனால் இவ்விடத்தில் மழை நீா் தேங்காதவாறு நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்தவா்களும், வாகன ஓட்டிகளும் தெரிவிக்கின்றனா்.

திட்டச்சேரி, திருமருகல், திருச்செங்காட்டாங்குடி, திருப்புகலூா், திருக்கண்ணபுரம், ஏனங்குடி, விற்குடி, வாழ்குடி, கங்களாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது. மழை நீா் சம்பா சாகுபடி வயல்களில் தேங்கியுள்ளதால் இளம் பயிா்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மழையால் பயிா்களுக்கு உரம் இடுதல் மற்றும் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனா். மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளில் மழையினால் மின்சாரம் தடைப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சீா்காழியில்...

சீா்காழியில் தொடா் மழையால், புதிய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கால்நடை மருத்துவமனை சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மற்ற பகுதி சுவா்களும் சேதமடைந்துள்ளது. அடுத்து, சீா்காழி இரணியன் நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதை மின்வாரிய ஊழியா்கள் சரிசெய்தனா். இதேபோல் பாலாஜி நகா், மருதநாயகம் நகா், கற்பகம் நகா், சின்னதம்பி நகா், தெட்சிணாமூா்த்தி நகா்,கோவிந்தராஜன் நகா், மேலமாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் தெருக்களில் தேங்கியது. சம்பா நாற்று நடவு, நேரடி விதைப்பு செய்துள்ள விவசாயிகளுக்கு சாகுபடி பணிக்கு இந்த மழை டானிக் போல் அமைந்துள்ளதாக கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com