2-ஆவது நாளாக மீன்வளப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
By DIN | Published On : 11th September 2019 07:05 AM | Last Updated : 11th September 2019 07:05 AM | அ+அ அ- |

மீன்வளஅறிவியல் படிப்புக்கு சுயநிதி கல்லூரி தொடங்க எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்கள் நாகையில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் மீன்வளஅறிவியல் படிப்புக்கு (பி.எப்.எஸ்.சி) சுயநிதி கல்லூரி தொடங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இதற்கான போராட்டத்தில் ஈடுபட்ட 11 மாணவர்களின் இடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், தகுதியானவர்கள் மட்டுமே மீன்வளஆய்வாளராக நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி, நாகை மாவட்டம், தலைஞாயிறு டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இளங்கலை மீன்வளஅறிவியல் (பி. எப். எஸ்.சி) மாணவர்கள் 96 பேர் திங்கள்கிழமை பருவத் தேர்வை புறக்கணித்து, நாகை கடற்கரை சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு காலவரையற்ற விடுப்பு என கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. தொடர்ந்து, கல்லூரியோடு இணைந்த விடுதியில் தங்கிப் பயின்ற மாணவர்களும், விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
2-ஆவது நாளில் மாணவர்கள் காத்திருப்புப் போராட்டம்: இந்நிலையில், விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் தங்களது உடமைகளுடன் நாகப்பட்டினம், நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலிலதா மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மீன்வளக் கல்லூரி முதல்வர் சுந்தரமூர்த்தி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். காலை 9 மணிக்குத் தொடங்கிய போராட்டம் பகல் 12 மணி வரை நடைபெற்றது.
போராட்டம் குறித்து மாணவர் ஒருவர் கூறியது: கல்லூரி மற்றும் விடுதிக்கு காலவரையற்ற விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளாதால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளோம். மீன்வள அறிவியல் படிப்புக்கான சுயநிதி கல்லூரி தொடங்கினால் இக்கல்வியின் தரம் பாதிக்கப்பட்டு, எங்களது வேலை வாய்ப்பு பறிபோகும் என்பதால், தமிழக அரசு மீன்வள அறிவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான சுயநிதி கல்லூரி தொடங்க வழங்கியுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டம் தொடரும்
என்றார்.
இதுகுறித்து, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் சு. பெலிக்ஸ் செய்தியாளர்களிடம் கூறியது: தவறான புரிதல் காரணமாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2025- ஆம் ஆண்டில் சுமார் 5000 பி.எப்.எஸ். சி. பட்டதாரிகள் தேவைப்படுகிறார்கள். ஆனால், தற்போது ஆண்டுக்கு 1000 மாணவர்கள் மட்டுமே இந்திய அளவில் உருவாக்கப்படுகின்றனர். சுயநிதி கல்லூரிகளை உருவாக்க வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்து செயல்படும் என்றார் அவர்.