சுடச்சுட

  
  thirumarugal

  நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் கடந்த 2 ஆண்டுகளாகப் பூட்டிக்கிடக்கும் சேவை மையக் கட்டடங்களைத் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளிலும் தலா ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சேவை மையக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.திருமருகல், அகரக்கொந்தகை, கொத்தமங்கலம், பனங்குடி, ஏனங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் சேவை மையக் கட்டடங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், திருக்கண்ணபுரம், இரவாஞ்சேரி உள்ளிட்ட பெரும்பாலான ஊராட்சிகளில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள சேவை மையக் கட்டடங்கள் திறக்கப்படாமல் உள்ளன.
  குறிப்பாக, திருக்கண்ணபுரம் ஊராட்சியில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட சேவை மைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, 2 ஆண்டுகளாக பயன்பாட்டுக்குத் திறக்கப்படாமல், பூட்டியே கிடக்கிறது. இதனால், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான வருமான சான்று, ஜாதி சான்று , இருப்பிடச் சான்று, திருமண உதவித் திட்டம், பட்டா மாறுதல், கணனி சிட்டா என 21 வகையான சான்றுகள் பெற அவதிப்படும் நிலை உள்ளது. இத்தகைய சான்றுகளை வாங்க திருக்கண்ணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நாகைக்கு வரவேண்டிய நிலை உள்ளது. 
  இந்த சேவை மையக் கட்டடத்தை மகளிர் சுய உதவிக் குழுவிடம் ஒப்படைத்தால், அவர்கள் மூலம் மக்கள் பல்வேறு சான்றுகள் பெற முடியும். தற்போது இந்த கட்டடம் பசுமை வீடு, பாரத பிரதமரின் வீடு திட்டத்துக்கு  வழங்கப்படும் இரும்புக் கதவுகளை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, 2 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் சேவை மையக் கட்டடத்தை திறந்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
  இதுகுறித்து, சமூக ஆர்வலர் ரமேஷ் கூறியது:
  திருமருகல் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளிலும் சேவை மையக் கட்டடங்கள் கட்டப்பட்டு, ஒரு சில ஊராட்சிகளில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. பெரும்பாலான ஊராட்சிகளில் குறிப்பாக திருக்கண்ணபுரம், குத்தாலம், இரவாஞ்சேரி, நரிமணம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கட்டப்பட்டு, திறக்கப்படாமல் உள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. இதனால், மக்கள் பல்வேறு சான்றுகள் பெறுவதற்கு நாகைக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது. நாகையில் உள்ள இ-சேவை மையங்களிலும் கூட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். 
  எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, சேவை மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
  இரவாஞ்சேரி ஊராட்சி மன்ற
  முன்னாள் தலைவர் ஏசுதாஸ் கூறியது:
  சேவை மையக் கட்டடங்கள் திருமருகல் ஒன்றியத்தில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததே ஆகும்.  உள்ளாட்சி நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற போது சேவை மைய கட்டடப் பணிகள் நடைபெற்றன. 
  ஆனால், உள்ளாட்சியின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால் அதை கேட்பதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அதிகாரம் இல்லாமல் போய்விட்டது. அரசு நிர்வாகம் சிறப்பாக இயங்க வேண்டும் எனில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். சேவை மையங்களை திறக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai