அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை: நோயாளிகள் சாலை மறியல்

சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள்

சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததைக் கண்டித்து நோயாளிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் வைத்தீஸ்வரன்கோவில், கதிராமங்களம், எடக்குடிவடபாதி, கன்னியாக்குடி, திருப்பங்கூர், கற்கோயில், தொழுதூர், ஆதமங்களம், பெருமங்களம், புங்கனூர், அட்டக்குளம், நல்லாஞ்சாவடி, நயினார்தோப்பு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் வந்து மருத்துவ தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.  
இந்நிலையில், இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஒரு மருத்துவர், குறைவான செவிலியர் மற்றும் பணியாளர்கள் கொண்டு செயல்படுவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல், புதன்கிழமை ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற மருத்துவமனையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். ஆனால், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு சில பணியாளர்கள் மட்டும் பணியில் இருப்பதை அறிந்து ஆத்திரமடைந்த நோயாளிகள் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அரசு மருத்துவமனை முன்பு மணல்மேடு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனையில் கூடுதலான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும், சிகிச்சை பெறவரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும், 24 மணி நேரமும் மருத்துவர்களை கொண்டு மருத்துவமனை செயல்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்த வைத்தீஸ்வரன்கோவில் போலீஸார் சம்மபவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து
சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் மணல்மேடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com