தூர் வாராததால் தண்ணீர் வரவில்லை: விவசாயிகள் அதிருப்தி

காவிரியில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டு பாய்ந்து வரும் நீர் நல்லத்துக்குடி பகுதி விவசாயிகளுக்கு சம்பா சாகுபடி செய்ய கைகொடுக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. 
தூர் வாராததால் தண்ணீர் வரவில்லை: விவசாயிகள் அதிருப்தி

காவிரியில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டு பாய்ந்து வரும் நீர் நல்லத்துக்குடி பகுதி விவசாயிகளுக்கு சம்பா சாகுபடி செய்ய கைகொடுக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. 
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள நல்லத்துக்குடி கிராமம் ஓம்சக்தி நகரில் பிடாரி குளம், லால்பகதூர் தெருவில் பாப்பாக்குளம், வடக்குத் தெருவில் பெரியகுளம், அம்பேத்கர் தெருவில் ஆவிகுளம், உடையார் தெருவில் ஆண்டி குளம், உடையார் குளம், நடுத்தெருவில் அல்லிகுளம், மேலத்தெருவில் அட்டைக்குளம், அக்ரஹாரத் தெருவில் அம்மா குளம் ஆகிய 9 குளங்கள் உள்ளன. மேலும், இப்பகுதியில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது. 
இந்த குளங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு நீராதாரமாக விளங்கிய கிளை வாய்க்கால்கள் கடந்த 30 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக தூர்க்கப்பட்டு, முழுமையாக ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக, நல்லத்துக்குடி கிராமத்தில், நிலத்தடி நீரைக் கொண்டே கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்யப்படுகின்றன. வாய்க்கால்களில் நீர்வரத்து இல்லாததால், அனைத்துக் குளங்களும் வறண்டு கிடப்பதால் நல்லத்துக்குடி கிராமத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
காவிரியில் இருந்து பிரிந்து செல்லும் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பி பிரிவு வாய்க்கால்கள் மூலம் நல்லத்துக்குடி கிராமம் நீர்வசதி பெறுகிறது. ஒன்று செருதியூர் வாய்க்கால் மற்றொன்று பண்டாரவாடை வாய்க்கால். இதில், நல்லத்துக்குடி வழியாக செருதியூர் செல்லும் பாசன வாய்க்கால் முற்றிலும் தூர்வாராமல் உள்ளது. பண்டாரவாடை வாய்க்கால் மட்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் குடிமராமத்து பணிகள் திட்டத்தில் தூர்வாரப்பட்டுள்ளது. 
ஆனால், பண்டாரவாடை வாய்க்காலில் இருந்து பிரிந்து நல்லத்துக்குடிக்கு செல்லும் நீர்வழிப் பாதையான, ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள சி பிரிவு வாய்க்கால்கள் (கண்ணிகள்), பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், மரங்கள் முளைத்தும், முள்செடிகள் புதர்கள் மண்டியும் தூர்ந்து போய் உள்ளது. மேலும், தனியார் பலர் நீர்வழிப்பாதையில் வீடுகள் கட்டியும், கழிப்பறைத் தொட்டி அமைத்தும் ஆக்ரமிப்பு செய்துள்ளதால், வாய்க்கால் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ், இந்த வாய்க்கால்களை தூர்வார கிராமமக்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால், இத்திட்டத்தில், குளங்களை மட்டுமே தூர்வார முடியும் என்றும் வாய்க்கால்களை சீரமைக்க அனுமதி இல்லை என்று அதிகாரிகள் மறுத்துவிட்டதாக அப்பகுதி விவசாயி சக்திவடிவேல் தெரிவித்தார். 
வாய்க்கால்களில் நீர்வரத்து இல்லாததால், காவிரியில் பல ஆயிரம் கன அடி நீர் பெருக்கெடுத்து வரும் நிலையிலும், தங்கள் கிராமத்தில் உள்ள குளங்கள் வறண்டு கிடப்பதாகவும், பாசனத்துக்கு நிலத்தடி நீரையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதாகவும் வேதனை தெரிவிக்கிறார் விவசாயி பழனிச்சாமி.
தங்களின் நிலை குறித்து, நாகை மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை கோட்டாட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் என பல தரப்பினரிடமும் மனு அளித்தும், தீர்வு கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கும் கிராமமக்களின் மனக்குறையை போக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com