பொருளாதார வீழ்ச்சி ஏற்படவில்லை: எச். ராஜா

விவசாயிகளுக்கு எதிரான எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்காது, இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படவில்லை

விவசாயிகளுக்கு எதிரான எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்காது, இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படவில்லை, 2019-2020-ஆம் நிதியாண்டின் இறுதியில் நாட்டின் வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும்  என பாஜக தேசியச் செயலர் எச். ராஜா கூறினார். 
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கேந்திரவித்யாலயா பள்ளிகளில், 6-ஆம் வகுப்பு வினாத்தாளில் ஜாதி ரீதியாக கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். அப்படி எந்த கேள்வியும் வினாத்தாளில் இடம் பெறவில்லை. தவறான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவதை திமுகவும், அதன் சார்பு கட்சிகளும் செய்து வருகின்றன. இதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைக் கடன் நிறுத்தப்படுவதாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற பொய்ச் செய்திகள் பரப்புவோரை சமூக விரோதிகள் என கருதி அவர்களை ஒதுக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் போல, முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான மாதம் ரூ.3 ஆயிரம் பெறும் ஓய்வூதியத் திட்டத்தை பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளார். விவசாயிகளுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும் அரசாக மத்திய அரசு விளங்குகிறது. விவசாயிகளுக்கு எதிரான எந்த  முடிவையும் மத்திய அரசு எடுக்காது. 
இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படவில்லை. 2019-2020-ஆம் நிதியாண்டின் இறுதியில் நாட்டின் வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளுக்கு பணம் வந்துள்ளது. இப்பணத்தை சிறு, குறு தொழில்களுக்கும், விவசாயத்துக்கும் கடனாக வழங்கும்போது, தற்போது உள்ள தேக்க நிலை மாறி, நாடு வளர்ச்சி அடையும் என்றார் எச். ராஜா. 
பேட்டியின்போது, பாஜக மாவட்டத் தலைவர் ஜி. வெங்கடேசன், தேசியச் செயற்குழு உறுப்பினர் கே. ராஜேந்திரன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் கோவி. சேதுராமன், இணை பொறுப்பாளர் அகோரம், மாவட்ட பொதுச் செயலர் நாஞ்சில். பாலு, நகரத் தலைவர் மோடி.கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com