சுடச்சுட

  

  காவலர்கள் பற்றாக்குறை: கேள்விக்குறியாகும் ரயில் நிலையப் பாதுகாப்பு?

  By DIN  |   Published on : 13th September 2019 03:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Lack of Police in Railway police station

  காவலர்கள் பற்றாக்குறையால் அவதியுறும் மயிலாடுதுறை இருப்புப் பாதை காவல் நிலையத்துக்கு போதிய காவலர்களை பணியமர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் 1912 -ஆம் ஆண்டு தொடங்கி, இருப்புப் பாதை காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
  இந்த காவல் நிலையம், சிதம்பரம் மார்க்கத்தில் வல்லம்படுகை, தஞ்சாவூர் மார்க்கத்தில் ஆடுதுறை, திருவாரூர் மார்க்கத்தில் பேரளம் ஆகிய ஊர்களை எல்லைகளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 
  ரயில்வே நடைபாதையில் தினசரி ரோந்துப் பணிகளில் ஈடுபடுவது, ரயில்வே பயணிகளின் பாதுகாப்பு, திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பது, ரயில் விபத்தில் இறப்பவர்களை கண்டறிந்து, இறந்தவர்களின் உடலை உரியவர்களிடம் ஒப்படைப்பது என ரயில்வே போலீஸாரின் பணிகளும், காவல்நிலைய எல்லையைப்போல் மிக நீண்டதுதான்.
  ஆனால், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள், காவலர்கள் என மொத்தம் 43 காவலர்கள் பணியில் இருக்க வேண்டிய இந்த ரயில்வே காவல் நிலையத்தில், கடந்த ஓராண்டுக்கு மேலாக, காவல் ஆய்வாளரையும் சேர்த்து, 11 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 14 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
  முன்பெல்லாம் மயிலாடுதுறை ரயில்வே காவல் நிலையத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும், இருப்புப் பாதை காவலர்கள் குறைந்தது ஒருவராவது பணியில் இருப்பார். சிதம்பரம் மார்க்கத்தில் சீர்காழியில் ஒருவர் ரயில் விபத்தில் உயிரிழந்தால், அந்த ரயில் நிலையத்தில் பணியில் இருக்கக் கூடிய ரயில்வே போலீஸார், உடனடியாக நிகழ்விடத்துக்குச் சென்று விடுவார். ஆனால், தற்போது காவலர்கள் பற்றாக்குறையால், ரயில் நிலையங்களில் இருப்புப் பாதை காவலர்கள் பணியில் இருப்பது இல்லை. அனைவரும் மயிலாடுதுறை இருப்புப் பாதை காவல் நிலையத்தில்தான் பணியில் உள்ளனர். காவல் எல்லைக்குள்பட்ட எந்த இடத்தில் விபத்து ஏற்பட்டாலும், மயிலாடுதுறை இருப்புப் பாதை காவல் நிலையத்தில் இருந்தே காவலர்கள் சென்று விசாரிக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது.
  அதுமட்டுமன்றி, மயிலாடுதுறையானது ரயில்வே சந்திப்பு என்பதால், ரயில்கள் தொடர்ச்சியாக சென்று வந்து கொண்டிருக்கும். இதனால் காவலர்கள் 24 மணிநேரமும் பணியில் இருக்கக் கூடிய கட்டாயச் சூழல் உள்ளது. அதுமட்டுமன்றி, காவலர்கள் ஓய்வு எடுப்பதற்கு சரியான ஓய்வு அறை கூட இல்லாத சூழ்நிலையில், அங்குள்ள காவலர்கள் பணி செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது பணியில் இருக்கக் கூடிய 14 காவலர்கள்தான் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
  ரயில்வே போலீஸாரின் இந்த பற்றாக்குறையைப் பூர்த்தி செய்து, ரயில் நிலைய பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai