முதல்வரிடம் அந்நிய முதலீடு குறித்து கேள்வி எழுப்ப ஸ்டாலினுக்கு உரிமை உண்டு

தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் கிடைத்த முதலீடு குறித்து கேள்வி எழுப்ப எதிர்க் கட்சித் தலைவர்

தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் கிடைத்த முதலீடு குறித்து கேள்வி எழுப்ப எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு உரிமை உண்டு என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் 
தெரிவித்தார். 
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வெளிநாடு சென்று முதலீடுகளை கவர்ந்து வந்ததாக கூறும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம், அதன் விவரத்தை கேட்க தமிழக எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு உரிமை உள்ளது. வெளிநாட்டு பயணத்தில் என்னென்ன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என தெரிவிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ப.சிதம்பரம் கைது சட்டப்படியான நடவடிக்கை என துரைமுருகன் கூறியுள்ளார். ஆனால், சட்டமே தவறாக பயன்படுத்தப்படுகிறது என நாங்கள் கூறுகிறோம். ப. சிதம்பரம் மீது பத்து குற்றச்சாட்டுகளைச் சுமத்துபவர்கள், அதில் ஒரு குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தைக் கூட வழங்கவில்லை. 
நாங்குநேரி சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை, திமுக, காங்கிரஸ் கட்சிகள் கலந்தாலோசித்து முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சிக்குத்தான் அத்தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கேட்க காங்கிரஸ் தொண்டர்களுக்கு உரிமை உள்ளது.
இந்திய விஞ்ஞானிகள் உலக விஞ்ஞானிகளுடன் போட்டியிடும் திறமை கொண்டவர்கள். அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகளை இந்தியா முந்திச் சென்றுவிட கூடாது என்பதற்காகவே, வல்லமை பொருந்திய நாடுகள் சந்திராயனில் பழுது ஏற்படுத்தி விட்டார்களோ என்ற சந்தேகம் உள்ளது.
திருநெல்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை அறிவித்ததுபோல், நாகை மாவட்டத்தை  பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அரசு அறிவிக்கலாம். அதிமுக அரசு ஆண்டுகளை கடத்துவதிலேயே ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற சிந்தனை அவர்களிடம் இல்லை. தற்போதைய எதிர்க்கட்சி நாளைய ஆளும் கட்சி ஆகும் வாய்ப்பு
உள்ளது. 
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடனை வசூலிக்கும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்கும் 55 சதவீத தொகையை மாணவர்களுக்கு வழங்கி இருக்கலாம். இந்தியாவில் பெருமுதலாளிகளின் வாராக்கடன் 10 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால், சிறுதொகையை கடன் பெற்றவர்களை திரும்பச் செலுத்த வங்கி நிர்ப்பந்தம் செய்கிறது. விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்குவதாக பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால், அறுவடைக்கு பணம் இல்லாதபோது, பிற்காலத்தில் வரும் ஓய்வூதியத் தொகையை வைத்து விவசாயி ஒன்றும் செய்ய முடியாது என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com