வைத்தீஸ்வரன்கோயில் குடமுழுக்கு: திருப்பணிகள் தொடக்கம்: தருமையாதீனம் பங்கேற்பு

வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்குக்கான திருப்பணிகளை தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம், இளைய சந்நிதானம்

வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்குக்கான திருப்பணிகளை தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம், இளைய சந்நிதானம் ஆகியோர் பங்கேற்று வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.  
நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தையல்நாயகிஅம்பாள் சமேத வைத்தியநாதசுவாமி கோயிலில் தனிச் சன்னிதியில் செல்வமுத்குக்குமாரசுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சித்தர் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். பிரசித்தி பெற்ற நோய்த் தீர்க்கும் தலமாகவும், செவ்வாய் பரிகாரத் தலமாகவும் விளங்கி  வருகிறது. 
புகழ் பெற்ற இக்கோயிலில் 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்குப் பிறகு மீண்டும் குடமுழுக்கு நடைபெறவில்லை. குடமுழுக்கு நடத்தி 20ஆண்டுகள் பூர்த்தியடைந்த  நிலையில் மீண்டும் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி பல்வேறு இந்து அமைப்புகள், பக்தர்கள்  கோரிக்கை விடுத்துவந்தனர். இதைத் தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் மற்றும் இந்து அறநிலையத் துறை இணைந்து வைத்தீஸ்வரன்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டது. 
அதனடிப்படையில், வியாழக்கிழமை காலை 9 மணியளவில் குடமுழுக்கு திருப்பணிகள், அடிக்கல் நாட்டு விழா தருமபுரம்  ஆதீனம் குருமகாசந்நிதானம் தலைமையில்  நடைபெற்றது. 
முன்னதாக, அனுக்ஞை விக்னேஸ்வரபூஜை ,வாஸ்த்துசாந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, விழா அன்று காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடைபெற்றது. பின்னர் தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யார் சுவாமிகள், இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த  சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் பூஜை செய்யப்பட்ட 21 செங்கற்களை திருப்பணி நன்கொடையாளர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகத் தலைவர் சேதுராமன், சென்னை  ஆட்டோ டெக் நிறுவனத் தலைவர் ஜெயராமன்அய்யர், மலேசியா மருத்துவர் அம்பிகைபாகன், சென்னை மகாலட்சுமி சாரிடபுள் டிரஸ்ட் மகாலட்சுமி, இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன், மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ராம.சேயோன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பாஜக மாவட்டத் தலைவர் வெங்கடேசன், பொது தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த அப்பர்சுந்தரம், சாமிநாதன், ஆய்வாளர் சதீஸ் மற்றும் பக்தர்கள் ஒவ்வொன்றாக வழங்க அதை குருமகா சந்நிதானம் பெற்று அடிக்கல் நாட்டினார். 
பின்னர் வேத விற்பன்னர்களின் வேதமந்திரங்கள் முழங்க மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி-அம்பாள் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் குருமகா சந்நிதானம், இளைய சந்நிதானம் சிறப்பு வழிபாடு செய்தனர்.
2 ஆண்டுக்குள் குடமுழுக்கு தருமபுரம் ஆதீனம்: நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யார் சுவாமிகள், இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த  சுவாமிகள் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சம்பாதி, ஜடாயு ஆகிய இருபறவைகள் சுவாமியை நோக்கி பூஜித்ததால் இத்தலம் புள்ளிருக்குவேளூர் என்றழைக்கப்படுகிறது. முன்பெல்லாம் மரத்தை தெய்வமாக வழிபட்டனர். அதனால்தான் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு தலவிருட்சம் என்பது உண்டு. வைத்தீஸ்வரன்கோயிலில் வேம்பு தலவிருட்சமாக பல ஆண்டுகளாக தழைத்தோங்கி விளங்கிவருகிறது. இந்த தலவிருட்சம் வேம்பு கடந்த ஆண்டு காற்றில் சாய்ந்தது. வைத்தியநாதர் அருளால் மீண்டும் தலவிருட்சம் வேர்பகுதியின் ஒரு துண்டிலிருந்து மீண்டும் துளிர்விட்டு  தலவிருட்சம் வளர்ந்து வருகிறது. இதை சாஸ்த்ரா பல்கலைக்கழக தாவரவியல் மாணவர்கள், நிபுணர்கள் அவ்வபோது கண்காணித்து வருகின்றனர்.
புகழ்பெற்ற வைத்தீஸ்வரன்கோயிலில் கும்பாபிஷேகம் செய்தவற்கான திருப்பணிகள்அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 12 கோடி செலவில் நடைபெறவுள்ள 46 திருப்பணி வேலைகளில் 41 பணிகளுக்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.  இந்த திருப்பணிக்கு இந்து அறநிலையத் துறை ரூ.12 கோடி திட்ட மதிப்பீடு செய்துள்ளது. முதல்கட்டமாக  20 திருப்பணிகள் ரூ. 2 கோடியில் தொடங்கி நடைபெறவுள்ளது. திருப்பணிகள் 2 ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன என்றனர். 
நிகழ்ச்சியில், இந்து மகாசபா ஆலயப் பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவர் ராம. நிரஞ்சன், இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலர் சுவாமிநாதன், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரிச் செயலர் திருநாவுக்கரசு, மடத்து கண்காணிப்பாளர் மோகன், மேலாளர் சேதுமாணிக்கம் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com