Enable Javscript for better performance
மனிதநேய மருத்துவர் மயிலாடுதுறை ராமமூர்த்தி..!- Dinamani

சுடச்சுட

  

  மனிதநேய மருத்துவர் மயிலாடுதுறை ராமமூர்த்தி..!

  By DIN  |   Published on : 14th September 2019 12:22 PM  |   அ+அ அ-   |    |  

  drramamurthy

  மயிலாடுதுறையில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, மருத்துவச் சிகிச்சைக் கட்டணமாக 1 ரூபாயில் தொடங்கி, தற்போது 10 ரூபாய் பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து, ஏழைகளின் துயர் தீர்க்கும் மருத்துவர் ராமமூர்த்தி ஆற்றும் மருத்துவத் தொண்டு மனதை நெகிழ வைப்பதாக உள்ளது. 
  திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ராமமூர்த்தி (85). இவர், தனது குடும்ப வறுமையைத் தாண்டி கடும் சிரமங்களுக்கு இடையே, பள்ளிக் கல்வி மற்றும் மருத்துவப் படிப்பை முடித்தார். 1958-ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் அரசு மருத்துவராக பணியில் சேர்ந்த இவர், ஓய்வு நேரங்களில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த கிராமங்களுக்குச் சென்று இலவசமாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
  அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின் மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் உள்ள தனது வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வரும் மருத்துவர் ராமமூர்த்தி, தன்னிடம் வைத்தியம் பார்க்கவரும் நோயாளிகளிடம் மருத்துவ கட்டணம் என எதையும் வலியுறுத்தி கேட்பதே இல்லை. தொடக்கத்தில், 1 ரூபாய் கட்டணமாக கொடுத்து வந்த நோயாளிகள், விலைவாசி ஏற்றத்தை கருத்தில் கொண்டு, தாங்களாகவே தற்போது பத்து ரூபாய் வரை டேபிளில் வைத்து செல்கின்றனர். 
  இதேபோல், இவர் எழுதிக்கொடுக்கும் மருந்துச் சீட்டில் அதிகபட்சம் ரூ. 50-க்கு மேல் மருந்துகள் எழுதுவது இல்லை. 
  நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். என்ற வள்ளுவரின் குறளுக்கு இணங்க, ஏழைகளின் பெரும்பாலான நோய்களுக்கு காரணம் பட்டினியே என்பதை உணர்ந்த மருத்துவர் ராமமூர்த்தி, தன்னிடம் நோய் என்று வரும், மிக வறுமையுற்ற நோயாளிகளுக்கு, மருந்து நிறுவனங்கள் இவருக்கு தரும் மாதிரி (சாம்பிள்) மருந்து, மாத்திரைகளை வழங்குவதோடு, சாப்பிட பணமும் கொடுத்து அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார். 
  தன்னிடம் வரும் நோயாளிகளின் முகத்தை பார்த்தே அவர்களது நோயை கணிக்கும் ஆற்றலோடு விளங்குகிறார் மருத்துவர் ராமமூர்த்தி. மருத்துவப் பரிசோதனை கட்டணம் குறைவு என்பதோடு, இவரிடம் சிகிச்சை பெற மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. கிளினிக் உள்ளே நுழையும் நோயாளிகளை அதிகபட்சம் 5 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வைக்க மாட்டார். இப்பகுதியில் ராசியான மருத்துவர் என்ற பெயரைப் பெற்றதால் வெளியூர்களில் இருந்து வசதிபடைத்தவர்களும் வந்து இவரிடம் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவர்களிடமும் மருத்துவ கட்டணம் எதையும் இவர் நிர்ணயிப்பதில்லை. ஏழை நோயாளிகள் தரும் அதே தொகையையே இவர்களும் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். 
  மருத்துவர் ராமமூர்த்தியின் மருத்துவ சேவைக்கு, அவரது மனைவி நீலாவதி (79) உறுதுணையாக இருந்து வருகிறார். சென்னை தி.நகரில் கிளினிக் நடத்திவரும் சிறுநீரக மருத்துவ நிபுணரான இவரது மகன் சீனிவாசன் தந்தையைப் போலவே குறைந்த கட்டணத்தில் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை வழங்கி வருகிறார்.
  இதுகுறித்து, மருத்துவர் ராமமூர்த்தி கூறியது: 3 நிமிடத்துக்கு மேல் நான் நோயாளியிடம் செலவு செய்வது கிடையாது. என்னிடம் வரும் நோயாளிகளை தொடர்ந்து வரச்சொல்லும் செயல் என்னிடம் இல்லை. அவர்கள் தரும் தொகையைப் பெற்றுக் கொள்வேன். சிலருக்கு இலவசமாகவே வைத்தியம் பார்த்து வருகிறேன். மாட்டுவண்டி மூலமும், நடந்து கிராமங்களுக்குச் சென்றும் வைத்தியம் பார்த்துள்ளேன். 
  இந்த காலத்தில் மருத்துவர்கள் நடப்பது என்பது அரிது. என்னால் முடிந்தவரை வைத்தியம் பார்ப்பேன். அதன்பிறகு தகுதியான மருத்துவர்களை பரிந்துரைத்து அனுப்பி வைத்து விடுவேன். இங்கு வரும் நோயாளிகளை பார்த்தவுடன் நோயை கணிக்கும் வரத்தை கடவுள் எனக்கு அளித்துள்ளார். கொஞ்சமான மருந்துதான் எழுதிக் கொடுப்பேன். 100 பேருக்கு வைத்தியம் பார்த்தால் 6 பேருக்காவது இலவசமாக வைத்தியம் பாருங்கள் என்று மற்ற மருத்துவர்களுக்கு கூறுவேன். அதை பின்பற்றுவதும், பின்பற்றாததும் அவரவர் விருப்பம். 
  எனது மகன் சீனிவாசன் சென்னையில் யூராலாஜிஸ்ட் முடித்து வைத்தியம் பார்த்து வருகிறார். அவரையும் என்னைப் போலவே சேவை செய்ய வைத்துள்ளேன். எனது துணைவியார் நீலாவதி எனக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறார் என்றார்.
  கிளினிக் உள்ளே நுழைந்த உடனேயே ரூ.100, 200 என பரிசோதனைக் கட்டணத்தை வசூல் செய்துவிட்டு, அதன்பின்னரே, ஸ்டெதஸ்கோப்பினை கையில் எடுக்கும் மருத்துவர்களுக்கு மத்தியில், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் மருத்துவர் ராமமூர்த்தியை ஓரிரு மருத்துவர்களாவது பின்பற்றுவார்களேயானால் மருத்துவம் புனிதமாகும். அவர்களை வரலாறு பேசும்.
   

  kattana sevai