சீர்காழி ரயில் நிலைய சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசல்..!

சீர்காழி ரயில் நிலைய சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசல்..!

சீர்காழி ரயில் நிலைய சாலையில் தொடரும் போக்குவரத்து நெருக்கடி, ரயில்வே கேட் மூடப்படும்போது, வாகன ஓட்டிகள்

சீர்காழி ரயில் நிலைய சாலையில் தொடரும் போக்குவரத்து நெருக்கடி, ரயில்வே கேட் மூடப்படும்போது, வாகன ஓட்டிகள் நீண்ட நேரம்  காத்திருக்கும் நிலைக்குத் தீர்வு காண ரயில் நிலைய சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
சென்னை - திருச்சி சோழன் விரைவு ரயில், திருச்செந்தூர் விரைவு ரயில், ராமேசுவரம் விரைவு ரயில், திருப்பதி விரைவு ரயில் உள்ளிட்ட பல்வேறு தொலைதூர விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள் நாள்தோறும் சீர்காழி ரயில் நிலையத்தில் சில விநாடிகள் நிறுத்தப்பட்டு, பின்னர் புறப்பட்டுச் செல்கின்றன. அதேபோல், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்களும் நாள் ஒன்றுக்கு 10 -க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்கின்றன.
சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்லாத விரைவு ரயில்களும் சீர்காழி நிலையத்தைக் கடந்துதான் செல்கின்றன. இவ்வாறு நாள்தோறும் சீர்காழியிலிருந்து சுமார் 40 -க்கும் மேற்பட்ட ரயில்கள் சீர்காழி கடவுப் பாதையை கடந்து செல்கின்றன. இந்த ரயில்கள் சென்று வருவதால், சீர்காழி ரயில் நிலைய சாலையில் உள்ள ரயில்வே கேட் அவ்வப்போது மூடப்பட்டு, ரயில் சென்றவுடன் திறக்கப்படுகிறது. இதனால், சீர்காழியிலிருந்து அகணி, வள்ளுவக்குடி, நிம்மேலி, கொண்டல், ஏனாக்குடி, வடரெங்கம், பனங்காட்டாங்குடி, தேனூர், மருதங்குடி, ஆலஞ்சேரி, அரூர் உள்ளிட்ட 40 -க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வரும் பொதுமக்கள் சீர்காழி  ரயில்வே கடவு பாதையை கடந்துதான் செல்கின்றனர்.
மேற்கண்ட கிராமங்களிலிருந்து சீர்காழியில் உள்ள தனியார் பள்ளிகள், நகராட்சிப் பள்ளி, தனியார் கல்லூரிகளில் பயிலும்  மாணவ, மாணவிகளும், சிதம்பரம், மயிலாடுதுறை போன்ற பகுதியில் உள்ள தனியார் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் ரயில் நிலையத்தைக் கடந்துதான் சீர்காழி நகருக்கு வந்து அங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு பேருந்துகளில் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள் அவசர வேலையாக சீர்காழி வந்து செல்லும் நேரங்களில் ரயில்கள் கடந்து செல்வதற்காக ரயில்வே கேட் மூடப்படுவதால், நீண்ட நேரம் காத்திருந்து அவதியடைகின்றனர்.
திருச்சி - சென்னை, சென்னை - திருச்சி சோழன் விரைவு ரயில்கள் சீர்காழி ரயில் நிலையத்துக்கு காலை 11.45 மணியளவில் அடுத்தடுத்து கடந்து செல்லும். அப்போது ரயில்வே கேட் மூடப்பட்டால் மீண்டும் ரயில் சென்ற பிறகு திறந்திட 10 நிமிடங்களுக்கு மேல்கூட ஆகிறது.
இதேபோன்று, மாலை நேரங்களில் ஒரு சில ரயில்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக அட்டவணைப்படி வருவதால், ரயில்வே கேட் 15 நிமிடம் வரை மூடப்பட்டுள்ள நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன.
அதேபோல், சரக்கு ரயில்கள் வைத்தீஸ்வரன்கோயில் அல்லது புத்தூர் போன்ற பகுதிகளில் வரும்போதே ரயில்வே கேட் மூடப்பட்டு விடுகிறது. ரயில்வே கேட் மூடப்படும் நேரங்களில் சீர்காழி பனங்காட்டாங்குடி சாலையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களால் சில கிலோ மீட்டர் தூரம் வரிசையாக நிற்கிறது.
ரயில் கடந்து சென்ற பிறகும் இந்த போக்குவரத்து நெரிசல் தீர்வதற்கு சில மணிநேரம் ஆவதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைகின்றனர். சீர்காழியிலிருந்து பனங்காட்டாங்குடி, கொண்டல், அகணி, வள்ளுவக்குடி போன்ற ஊர்களுக்குச் செல்ல ரயில் நிலைய கடவுப் பாதை சாலைதான் பிரதானம். இந்த சாலையை விட்டு மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்றால், புறவழிச்சாலையை சுற்றிக்கொண்டு (8 கி.மீ.) அதிக தூரம் விரயம் செய்து செல்ல நேரிடும். ரயில்வே கேட் மூடப்படும்போது, ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும் கிராமங்களில்  நிகழும் தீ விபத்து, அவசர உதவிக்கு செல்லும் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனங்களும் ரயில்வே கேட்டில் காத்திருப்பில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்படுவதால், பாதிப்பு அதிகமாகிறது.
தற்போது, விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில்வே பாதையில் மின் பாதையாக மாற்றும் பணிகளும் ஒருபுறம் தீவிரமாக நடைபெறுவதால், வரும் காலங்களில் அதிகளவு ரயில்கள் வந்து செல்லும் பகுதியாகத்தான் சீர்காழி ரயில் நிலைய பகுதி அமையும். ஒரு மாநிலத்தில் தரைவழிப் போக்குவரத்து சிறப்பாக இருந்தால்தான் வர்த்தகம் நன்றாக இருக்கும் என்பதால், தற்போது மத்திய, மாநில அரசுகள் நெடுஞ்சாலைகள், பாலங்கள் கட்டுவதற்கும், சாலைகளை நான்கு வழிச் சாலை, எட்டு வழிச் சாலையாக அகலப்படுத்திடவும் பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதேபோல், பல ஆண்டுகாலமாக சீர்காழி ரயில் நிலைய சாலையில் ஏற்படும் காத்திருப்பு, அவதிகளை நீக்கிட சீர்காழி ரயில் நிலைய சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும்,  வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட மாநில நெடுஞ்சாலைத்துறையினர், ரயில்வே துறையினர் இணைந்து ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
இதுகுறித்து விழுதுகள் இயக்கத் தலைவர் ஏ.கே. ஷரவணன் கூறியது: சீர்காழி - பனங்காட்டாங்குடி செல்லும் சாலையில்  சீர்காழி ரயில் நிலையம் அமைந்துள்ளது. நாள்தோறும் சீர்காழி ரயில் நிலையத்தைக் கடந்து 40 -க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. இவ்வாறு ரயில்கள் செல்லும் நேரத்தில் கடவுப் பாதை கேட் மூடப்படுவதால், சீர்காழியிலிருந்து அகணி, வள்ளுவக்குடி, கொண்டல், வடரெங்கம், பனங்காட்டாங்குடி போன்ற பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவிகளும் மற்றும் பல்வேறு கிராமங்களிலிருந்து சீர்காழிக்கு வந்து செல்லும் பொதுமக்களும் ரயில்வே கேட்டில் பல மணி நேரம் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது.
இதனால் உரிய நேரத்தில் அலுவலகம், பள்ளி, கல்லூரி போன்றவைகளுக்குச் செல்ல முடியவில்லை. மேலும், அவசர காலத்துக்குச் செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் ஆகியவையும் காத்திருந்து தாமதாகச் செல்வதால் நோயாளிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ரயில்வே கேட் மூடப்பட்டு திறக்கும்போது, பெரும் போக்குவரத்து நெருக்கடியும், அது சீராகி வாகனங்கள் கடந்து செல்ல பல மணிநேரமும் ஆகிறது. மாற்றுவழி இல்லாத ரயில்வே கேட் பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதே இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்.
இதுதொடர்பாக, மயிலாடுதுறை மக்களவை தொகுதி உறுப்பினர் செ. ராமலிங்கத்திடம், விழுதுகள் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் மத்திய, மாநில அரசுத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com