விரிந்தது சாலை; சுருங்கியது பாசனக் கால்வாய்

திருக்குவளை அருகேயுள்ள ஆதமங்கலத்தில் சாலை விரிவாக்கத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள
விரிந்தது சாலை; சுருங்கியது பாசனக் கால்வாய்

திருக்குவளை அருகேயுள்ள ஆதமங்கலத்தில் சாலை விரிவாக்கத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள பாசனக் கால்வாய் காணாமல் போனதால் விவசாயிகள் நீரின்றி துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
நாகை மாவட்டம், திருக்குவளை அருகேயுள்ள ஆதமங்கலம் கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் விளைநிலம் உள்ளது. இந்த விளைநிலங்களுக்கு தேவையான நீர் பாசனக் கால்வாய் மூலம் பெறப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் விடங்கலூர் - மாவூர் சாலை நெடுஞ்சாலைத் துறையினரால் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, ஆதமங்கலம் மற்றும் மாவிலங்கை ஆகிய கிராமங்களுக்கு செல்லும் பாசனக் கால்வாய் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டு கால்வாயின் பெரும் பகுதியில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. 
3 மீட்டர் அளவுடைய கால்வாயின் அளவு மிகவும் குறைந்து தற்போது, ஓடை போல் காட்சியளிக்கிறது. அந்த இடத்தில் கால்வாய் இருந்ததுக்கான தடயங்களே தெரியாத வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தகவல் 
தெரிவிக்கின்றனர். 
மேலும், நெடுஞ்சாலைத் துறையின் இந்த ஆக்கிரமிப்பினால் அப்பகுதி வழியே பாசனத்துக்குச் செல்லும் நீரில் தேக்க நிலை ஏற்பட்டு விவசாயம் செய்வது என்பது கேள்விக்குறியாகியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பருவ மழை பெய்யும் போது மற்றும் காவிரி நீர் பாயும் சமயங்களில் பாசனக் கால்வாயின் அளவு குறைவாக இருப்பதால் கிராமத்தின் கடைகோடி வரை நீர் சரிவர சென்றடையாது என விவசாயிகள் தடுப்புச் சுவர் கட்டும் போது எதிர்ப்பு தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. 
நெடுஞ்சாலை துறையினர் எங்களது கோரிக்கைக்கு செவி சாய்காமல் கால்வாயினை ஆக்கிரமித்து தடுப்புச் சுவர் கட்டி முடித்து விட்டனர். இதனால், சித்தாறு மூலம் பாசன வசதி பெறும் சாட்டியக்குடி, தென்மருதூர், ஆதமங்கலம்,விடங்கலூர், மாவிளங்கை ஆகிய பகுதிகளுக்கு தற்போது பாசனக்கு நீர் பாய்ச்ச முடியாமல் உள்ளது. 
இந்நிலையில் சம்பா சாகுபடியை மட்டுமே நம்பியிருந்த இப்பகுதி விவசாயிகளின் வேதனையை போக்கும் வகையில் காவிரியிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டதாக இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், அவர்களின் மகிழ்ச்சியானது கானல்நீர் போல பாசன கால்வாயின் மூலமாக முறைப்படி கிராமத்தின் கடைக்கோடி பகுதிவரை செல்லாததால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் ஒரு சிலர் எப்படியாவது தண்ணீர் வந்து விடும் என்ற நம்பிக்கையில் நேரடி நெல் விதைப்பு முறையில் இறங்கியுள்ளனர். ஆனால்,  முறைப்படி தூர்வாரப்படாமல் இருக்கும் கால்வாயினால் வயலுக்கு போதிய நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் முளைக்காமல் உள்ளது. பருவ மழை பெய்தால் கூட கால்வாயின் அமைப்பு சரியாக இல்லாத காரணத்தினால் இப்பகுதியில் நிகழாண்டு விவசாயம் மேற்கொள்வது என்பதே கேள்விக்குறியே என இப்பகுதி விவசாயிகள் வேதனை  தெரிவிக்கின்றனர். 
மேலும், இனி வரும் காலங்களில் கால்வாய்களை முறைப்படி தூர்வாரி பாசன வசதிக்கு உதவ வேண்டும், கால்வாய்களை ஆக்கிரமித்து தடுப்புச்சுவர் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்  என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com